ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
'இணைந்து நடப்பது' என்பதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறியுள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Jean-Claude Hollerich
பிப்ரவரி 13, இத்திங்களன்று, லெபனோனின் தலைநகர் பெய்ரூத்தில் தொடங்கிய மத்திய கீழை வழிபாட்டு முறை நாடுகளுக்கான கண்டங்களின் Synodal பேரவைக் கூட்டத்தின்போது இவ்வாறு கூறியுள்ளார் 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும் Luxembourg நாட்டின் கர்தினாலுமான Hollerich.
மத்திய கீழை வழிபாட்டு முறை என்பது 'ஒருங்கிணைந்த பயணத்திற்கான' நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், ஒன்றிணைந்து பயணிப்பது என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது எளிது, ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும், இதன் அனுபவத்தை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் Hollerich.
ஒன்றிணைந்த பயணத்தின் செயல்முறை என்பது பங்கேற்பு ஆகும், இது இறைமக்களையும் ஆயர்களையும் ஒருபோதும் போட்டிக்கு உட்படுத்தாது, ஆனால் அதேவேளையில், அவர்களை ஒரு நீடித்த உறவில் வைத்திருக்கிறது என்றும், இருதரப்பினரும் தங்கள் செயல்பாட்டை நிறைவேற்ற அனுமதிக்கிறது என்றும் தனது தொடக்க உரையில் கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் (Mario Grech)
ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வதென்பது, உலகில் கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுப்பதிலும், காலத்தின் அறிகுறிகளைப் படிப்பதிலும், அதன் பணியை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளும் ஒரு திருஅவையாக அர்பணிப்பதிலும் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் இப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மாரோனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Al-Rahi.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்