திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தையர் 5ம் பவுல், 15ம் கிரகரி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கமிலோ பொர்கேசே என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1550ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி உரோம் நகரில் பிறந்தார். இவர் உரோம் நகரில் பிறந்தார் எனினும், இத்தாலியின் சியென்னா நகரின் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புனித கத்தரீனாவின் உறவினரும்கூட. இவர் பெருஜியாவிலும் பதுவாவிலும் சட்டம் பயின்றார். 1596ஆம் ஆண்டு கமிலோ பொர்கேசேயை திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் கர்தினாலாக உயர்த்தினார். இவர் உரோம் நகருக்கான திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் செயலாற்றினார். திருத்தந்தை பதினோராம் லியோ இறந்தபோது, அனைவரின் பார்வையும் இவர் மீதே விழுந்தது. 1605 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இவரும், எதனுடனும் உடன்பாடு காணாமல், நீதியோடும் நேர்மையோடும் செயல்படத் துவங்கினார். சட்ட வல்லுனரான இவரின் செயல்களில் இவரின் நிர்வாகத் திறமை வெளிப்பட்டது. இவர் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் செய்த முதல் காரியமே, பல்வேறு காரணங்களைக் காட்டி உரோம் நகரில் தேவையற்று தங்கியிருந்த ஆயர்களையும் கர்தினால்களையும் அவர்களுக்குரிய மறைமாவட்டங்களில் பணிபுரிய அனுப்பியதுதான். வெனிஸ் குடியரசோடு இவரின் மோதலும் துவங்கியது. வெனிஸ் குடியரசில், அருள்பணியாளர்கள் சமூக நீதிமன்றங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற சட்டத்தையும், புதிய கோவில்களைக் கட்டுவதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டத்தையும் திருத்தந்தை எதிர்த்தார். இதனால் வெனிஸ் பகுதியிலிருந்து Theatine துறவு சபையினரும், கப்புச்சின் சபையினரும், இயேசு சபையினரும் வெளியேற்றப்பட்டனர். திருத்தந்தையும் வெனிஸ் அரசு மீது காட்டுப்பாடுகளை விதித்தார். அரசும் இச்சட்டங்களை வெளிப்படையாக திரும்பப் பெற மறுத்தாலும், பாரம்பரிய பக்தி முயற்சிகளில் தலையிடமாட்டோம் என அறிவித்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை வெனிஸ் அரசு மீதான கட்டுப்பாடுகளை 1607ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தளர்த்தினார். இதனால் Theatine மற்றும் கப்புச்சின் துறவு சபைகளை திரும்ப ஏற்றுக்கொண்டது வெனிஸ் அரசு. ஆனால், இயேசு சபையினரை தன் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தது.
இந்த திருத்தந்தை 5ஆம் பவுலும் திருஅவையில் தன் உறவினர்களுக்கு பதவிகளை வழங்கினார். ஆனால், அவர்கள் அனைவரும் அதற்கு தகுதியுடையவர்களாகவே இருந்தனர். உரோம் நகரை கட்டியெழுப்ப இவர் அதிக செலவளித்தார். நூறாண்டாக இடம்பெற்றுவந்த புனித பேதுரு பெருங்கோவில் சீரமைப்புப் பணிகள் இவர் காலத்திலேயே நிறைவுக்கு வந்தன. புனிதர் சார்லஸ் பொரோமியோ, உரோமின் புனிதை பிரான்செஸா ஆகியோரை புனிதராகவும், புனிதர்கள் இக்னேசியஸ் லயோலா, பிரான்சிஸ் சவேரியார், பிலிப் நேரி, கார்மல் துறவு சபையின் அவிலா திரேசா, லூயிஸ் பெர்ட்ராண்ட், வில்லானோவாவின் தாமஸ், மத்ரித்தின் இசிதோர் ஆகியோரை அருளாளர்களாகவும் அறிவித்தவர் திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்களே. இவரால் பல கல்வி நிலையங்களும் பிறரன்பு நிறுவனங்களும் தழைத்து வளர்ந்தன. 1621ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இறந்த திருத்தந்தை ஐந்தாம் பவுலின் உடல் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.
திருத்தந்தை 15ஆம் கிரகரி
அடுத்து திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை 15ஆம் கிரகரி 1554ம் ஆண்டு ஜனவரி மாதம் இத்தாலியின் Bolognaவில் பிறந்தவர். உரோம் நகரின் யேசு சபை பேராசிரியர்களின் கீழ் பயின்ற இவர் பொலோஞ்சா திரும்பி திருஅவைச் சட்டத்திலும், சமூகவியல் சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்று, பின்னர் 1612ல் திருத்தந்தை 5ஆம் பவுலால் பொலோஞ்சாவின் பேராயராக நியமிக்கப்பட்டார். அதே திருத்தந்தையால் 1616ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், திருத்தந்தை 5ஆம் பவுல் இறந்தபோதுதான் புதிய திருத்தந்தையின் தேர்வுக்காக உரோம் நகர் வந்தார். இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 15ம் கிரகரி என்ற பெயரை தேர்வு செய்து திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபோது இவரின் வயது 67. இவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்ததால், நிர்வாகத்தில் துணைபுரிய நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேடினார். இவர் தேர்ந்து கொண்டது, இவரின் சகோதரரின் மகனாகிய Ludovico Ludovisi என்ற 25 வயது இளைஞரை. இந்த இளம் உறவினரும் திருஅவைக்கு மிகுந்த விசுவாசமாகவே செயல்களை ஆற்றினார். திருத்தந்தை 15ஆம் கிரகரி, தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றாம் நாளே இந்த 25 வயது உறவினரை கர்தினாலாக உயர்த்தியதுடன், தன் சகோதரன் Orazioவை திருப்பீடப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமித்தார்.
பாப்பிறைத் தேர்வில் சில சிறப்பு விதிகளைக் கொணர்ந்தார் இத்திருத்தந்தை("Decet Romanum Pontificem" - மார்ச் 12, 1622). இரகசிய வாக்கெடுப்பு, ஒருவர் ஒரு வேட்பாளருக்கே வாக்களிக்க முடியும், தனக்குத்தானே எவரும் வாக்களிக்கக் கூடாது என்பவையே அவை. அரசியல் தலையீட்டை குறைப்பதற்காகவே இந்த இரகசிய வாக்கெடுப்பைக் கொணர்ந்தார் இத்திருத்தந்தை. இவர் வெளிநாட்டு மறைபோதகப் பணிகளுக்கு மிகுந்த ஊக்கமளித்தார். 1622ஆம் ஆண்டு சனவரி ஆறாம் தேதி Propaganda Fide என்ற பெயரில் நற்செய்தி அறிவிப்பு பேராயத்தை உருவாக்கியவர் இவரே. இவரும் இவரின் உறவினர் கர்தினால் Ludovicoவும் துறவு சபைகளுக்கு, குறிப்பாக யேசு சபையினருக்கு அதிக ஆதரவு அளித்தனர். இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார், பிலிப் நேரி, அவிலா தெரேசா ஆகியோரை புனிதர்களாக அறிவித்தது இத்திருத்தந்தை 15ஆம் கிரகரிதான். Isidore என்ற ஸ்பானிய பொதுநிலையினரையும் புனிதராக அறிவித்தார். பில்லிசூனியம் போன்றவைகளுக்கு எதிரான சட்டம் ஒன்றை 1623ல் கொணர்ந்தார் திருத்தந்தை 15ஆம் கிரகரி. பழைய கடுமையான தண்டனை முறைகளை இதன் வழியாகக் குறைத்தார். பில்லிசூனியத்தில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மரணதண்டனை என்பதை மாற்றி, சாத்தானோடு சேர்ந்து கொலைகளில் ஈடுபடுவோருக்கு மட்டுமே மரண தண்டனை என்றார். அரசியல் விவகாரங்களிலும் நேர்மையுடன் செயல்பட்டார். இவர் காலத்தில் இங்கிலாந்துடன் ஆன நட்புணர்வு மேம்பட்டது. இவர் காலத்தில்தான் கப்பூச்சியன் சபையினரும், பிரான்சிஸ்கன் சபையினரும், இயேசு சபையினரும் இணைந்து பிரான்சில் திருமறைக்கு எதிராகச் சென்றவர்களை கத்தோலிக்க மறைக்கு கொணர்ந்தனர். கத்தோலிக்க ஆட்சியாளர்கள் அனைவரும் இவரை பெருமதிப்புடன் நடத்தினர். திருத்தந்தை 15ம் கிரகரி 1623ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி உரோம் நகரில் காலமானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்