இயேசு சோதிக்கப்படுதல் இயேசு சோதிக்கப்படுதல் 

தவக் காலம் முதல் ஞாயிறு : ‘சோதனைகளை வெல்வோம்!’

நமது இலட்சியத்தில் தெளிவு இருக்கும்போது, நாம் சோதனைகளை வெல்வது எளிதான காரியமாக இருக்கும் என்பதை உணர்வோம்.
ஞாயிறு சிந்தனை 25022023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. தொநூ 2: 7-9, 3: 1-7    II.  உரோ 5: 12-19      III.  மத் 4: 1-11)         

இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். ஏறத்தாழ 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘The Miracle Woman’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி,  பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இலட்சியம் தெளிவாக இருக்கும்போது, வாழ்க்கையில் வரும் சோதனைகளையும் சாதனைகள் ஆக்கலாம் என்பதற்கு ஹெலென் கெல்லர் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசங்கங்கள் சோதனைகளை வெல்பவர்களே சாதனையாளர்களாக ஒளிர முடியும் என்ற கருத்தை முன்வைக்கின்றன. வாசகத்தில் இறைத்தந்தை முன்வைத்த சோதனையில் நமது முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் தோல்வியுறுகின்றனர். அதற்கு காரணம், "நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்" என்று கூறிய பாம்பின் மாய வலையில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பழத்தின் மீதான மாயக் கவர்ச்சி ஏவாளை சுலபமாக வீழ்த்தி விடுகிறது. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள் என்று தொடக்க நூல் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, இந்த மூன்று காரியங்களைக் நம் மனதில் கொண்டு இப்போது நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

01.    உண்பதற்கு சுவையானது

உண்பதற்கு சுவையானது என இன்றய உலகம் பல்வேறு உணவுப்பொருள்களாலும்,  மதுபான வகைகளாலும் கவர்ந்திழுக்கப்படுகின்றது. வண்ண வண்ண விளம்பரங்கள் மனிதரைக் கவர்ந்திழுத்து இவை இரண்டிற்கும் அடிமையாக்கிவிடுகின்றன. உண்பதற்கு சுவையானது என்பது பெருந்தீனி என்னும் கொடிய பாவத்திற்கு இட்டுச் செல்கிறது. பெருந்தீனி என்பது, உடல் மற்றும் ஆன்மாவிற்குத் துயரங்களை ஏற்படுத்தி அவற்றைப் பாவத்தில் தள்ளுகிறது. பெருந்தீனி என்ற தீமையை எதிர்த்துப் போராடுவது உணவின் மீதான பசியை விருப்பத்துடன் அடக்குவதை குறிப்பிடுவது அல்ல, மாறாக, வாழ்க்கையில் அதன் உண்மையான இடத்தைப் பற்றி சிந்திப்பது ஆகும். நவீன கலாச்சாரத்தில், எந்தெந்த சுவையான உணவை எந்தெந்த வழிகளில் உண்ணவேண்டும் என்பது மருத்துவப் பரிந்துரைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் Maggi noodles என்ற உணவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவ்வுணவுப் பொருளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் Maggi noodles-க்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்ததைத் தொடர்ந்து, Maggi noodles-க்குத் தமிழகத்திலும் தடை விதிக்கப்பட்டது. விற்பனையில் உள்ள அனைத்து Maggi noodles உணவுப் பொருள்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், ஒருசில மாதங்களிலேயே, இது தவறான பொய் பிரச்சாரம் என்றும், நாங்கள் காரீயத்தின் அளவை அதிகமாக Maggi noodles-இல் சேர்க்கவில்லை என்றும் கூறி விற்பனையை மீண்டும் தொடங்கிவிட்டது அந்நிறுவனம். உண்பதற்குச் சுவையானது என்பதன் பெயரில், இன்று எத்தனையோ விதமான பாவச் செயல்கள் நம் சமுதாயத்தில் அரங்கேறி வருகின்றன.

இரண்டாவதாக, உண்பதற்குச் சுவையாக இருப்பவை மதுவும் போதைப் பொருள்களும்தாம். இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் போதைக்கு அடிமையாக்கி இருப்பவையும் இவைகளே. அண்மையில் தமிழகத்தில் இளம்பெண்கள் சிலர் டாஸ்மாஸ்க் கடையில் மது வாங்குவதை யாரோ ஒரவர் பதிவு செய்து காணொளியாக வெளியிட்டிருந்தார். இன்று பாமர மக்கள் தொடங்கி கல்லூரி இளைஞர்கள் வரை இந்தப் போதைப் பொருள்களின் பழக்கத்தால் கவரப்பட்டு பாவம் என்னும் மாய வலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, பிறர்நலம் அழிந்து, சுயநலம், பேராசை, சமூக ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள், பிணக்குகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்மங்கள், மனித வர்த்தகம் போன்ற சமூகப் பாவங்கள் விளைந்து பெரியளவில் போர்களையும், பயங்கரவாதச் செயல்களையும் தோற்றுவித்து வருகின்றன.

02.    கண்களுக்குக் களிப்பூட்டுவது:

இன்று ஒட்டமொத்த உலகத்தையும் தன் பிடியில் வைத்திருப்பது கண்களுக்குக் களிப்பூட்டும் விளம்பரங்கள்தாம். ‘விளம்பரமின்றி விற்பனையில்லை’ என்பதே தாரக மந்திரமாகி இருக்கிறது. குறிப்பாக, நம் தமிழகச் சூழலில் வண்ண வண்ண உடைகளும், விதவிதமான நகைகளும் நம் கண்களுக்குக் களிப்பூட்டி அவற்றில் வீழ்ந்துபோக வைப்பதில் விளம்பரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்தக் காலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே புதிய உடைகள் வாங்கவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றோ, எல்லா விழாக்களுக்கும் புதிய உடைகள் வாங்கி அணியும் பழக்கம் வந்துவிட்டது. பல்வேறு விளம்பரங்கள் வழியாக கண்ணை கவரும் புதியவகை வடிவங்களில் ஆடைகள் வருவதைப் பார்த்தவுடனேயே, அதுபோலவே வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால், நன்றாக இருக்கும் பழைய நல்ல ஆடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு புதிய ஆடைகள் வாங்க மோகம் கொள்கின்றோம். மேலும், மற்றவர்களைப் போல தங்களால் புத்தாடைகள் உடுத்த முடியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மை ஏழை எளியவர்களிடம் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடுகிறது. இதன் விளைவாக வட்டிக்குக் கடன் வாங்கியாவது இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள். இதுவே பல்வேறு பாவச் செயல்கள் விளைவதற்குக் காரணமாகிவிடுகிறது.

இரண்டாவதாக, கண்கவரும் பொன் நகைகள் அணிவது இன்றைய ஒட்டுமொத்த இந்தியாவையும் சீர்குலைத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, தமிழகத்திலும், கேரளாவிலும் சொல்லவே தேவையில்லை. இன்று நகைகள் இல்லாமல் திருமணம் இல்லை என்ற அகோர நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரச்சனையால் எத்தனையோ இலட்சம் இளம்பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். பலர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் அதேவேளை, திருமணமான பெண்களில் பலர் இந்த நகை பிரச்சனையால் வரதட்சணை என்னும் பாவத்தின் பிடியில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். வீடுகளில் பெண்குழந்தைகள் பிறந்துவிட்டாலே போதும், அவர்களுக்கு நகைகளை வாங்கிச் சேமித்து வைப்பதியிலேயே அவர்தம் பெற்றோரின் வாழ்வு முழுவதும் வீணாகிவிடுகிறது. எவ்வளவுதான் நகைவிலை ஏறினாலும் நகை வாங்கும் மக்களின் கூட்டம் மட்டும் குறைவதில்லை என்பதைக் காணும்போது, மக்கள் பொன் நகைகள் மீது கொண்டுள்ள கட்டுக்கடங்கா மோகம் இன்னும் குறையவில்லை என்பதை உணர முடிகிறது. இதனால் குடும்ப வாழ்வின் உயர்ந்த நெறிகளை விடுத்து, பொய்யான, போலியான, ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு பாவத்தில் வீழ்ந்து விடுகின்றோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பொன் நகைகளுக்காகவே கொலை, கொள்ளை, பாலியல் வன்மங்கள், உறவு முறிவுகள் போன்றவை ஏற்படுகின்றன என்பதை செய்தித் தாள்களில் படிக்கின்றோம்.

03.    அறிவுபெற விருப்பதக்கது

இன்றைய உலகில் மிதமிஞ்சிய அறிவுப்பற்றும் பாவத்தை விளைவிக்கும் ஒரு முக்கியக் காரணியாகிறது. கடவுளை அறியவேண்டும் அவரைப் போல ஆகவேண்டும் என்ற பேராசையால்தான் ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ந்தனர் என்பதை நாம் உணரவேண்டும். இன்றைய நம் சமுதாயத்தில், தொடக்க நிலையில் கற்பிக்கும் ஆசிரியர்களை மேல்நிலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் நடத்துவதும், இந்த இருபிரிவினரையும், கல்லூரிப் பேராசிரியர்கள் பாகுபாடு கொண்டு நடத்துவதும், பாவத்திற்கான வழிகளாக அமைகின்றன. மேலும் இந்த வேறுபாடு துறவு வாழ்வில் நிகழ்ந்து வருவது இன்னும் வேதனையானது. அந்தக் குருவைப் போல அல்லது அந்தச் சகோதரியைப் போல, நானும் படிக்க வேண்டும், எனக்கும் அனுமதி கொடுங்கள் என்று தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் வீண் விவாதம் செய்வதைப் பார்த்திருக்கின்றோம். நான் ஒரு குருவாகவோ அல்லது அருள்சகோதரியாகவோ இருப்பதே போதும், அதுவே புனிதம், அதுவே பெருமை என்று உணராமல், வெறித்தனமான அறிவு பசிகொண்டு ஆன்மிக வாழ்வை மாசுபடுத்தும்போது பாவம் துறவு வாழ்விலும் நுழைகிறது.  

இன்றைய நற்செய்தியில் மேற்கண்ட மூன்று சோதனைகளையும் இயேசுவுக்கு முன்வைக்கின்றது அலகை. முதலாவதாக, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்று சுவைதரும் உணவை நோக்கி இழுக்கிறது அலகை. ஆனால், “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்று கூறி அலகையின் முதல் சோதனையை முறியடிக்கிறார் இயேசு. இரண்டாவதாக, அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்று. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று கூறி களிப்பூட்டும் கவர்ச்சியை காட்டுகிறது அலகை. ஆனால், இயேசு, “‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று கூறி அலகையை வெல்கின்றார். மூன்றாவதாக, மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச்சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்று கூறி இயேசுவுக்கு அறிவைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஊட்டுகிறது அலகை, ஆனால், இயேசுவோ, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்று கூறி மூன்றாவது சோதனையையும் வென்று அலகையை விரட்டியடிக்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய ஆதமாகப் படம்பிடித்து காட்டுகின்றார் புனித பவுலடியார். இறைத்தந்தைக்குக் கீழ்ப்படியாமல் ஒட்டுமொத்த உலகையும் சாவின் பிடிக்குள் தள்ளியவர் பழைய ஆதாம், ஆனால் இறைத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து, கொடிய பாடுகள் நிறைந்த சிலுவைச் சாவை ஏற்றத்தன் வழியாக ஒட்டுமொத்த உலகையும் சாவின் பிடியிலிருந்து விடுதலைப் பெறச் செய்து, என்றுமுள்ள நிலைவாழ்வுக்கு அழைத்துச் சென்றவர் புதிய ஆதாமான இயேசு. இதன் காரணமாகவே, ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை என்றும், ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்" என்றும் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார்.

நாம் சோதனை என்னும் கொள்கலனில் சுட்டெரிக்கப்பட்டால்தான் இலட்சிய வாழ்வுக்கான வைரங்களாக ஒளிரமுடியும். அதாவது, நமது இலட்சியத்தில் தெளிவு இருக்கும்போது, சோதனைகளை வெல்வது நமக்கு எளிதான காரியமாக இருக்கும் என்பதை உணர்வோம். ஆகவே, சோதனைகளை மனவுறுதியோடு தாங்கும் விதமாக, நமது இலட்சியத்தில் உறுதியோடு இருப்போம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2023, 13:00