பழைய ஏற்பாட்டு பஞ்சகாலத்தில் எகிப்தியர் நிலை பழைய ஏற்பாட்டு பஞ்சகாலத்தில் எகிப்தியர் நிலை 

தடம் தந்த தகைமை- உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும்...

யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.

பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. உலகெங்கும் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின. எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார். எகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, “எங்களுக்கு உணவு தாரும்; பணம் இல்லையென்பதால், உம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்?” என்றனர். அதற்கு அவர், “உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்” என்றார். எனவே, அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது, யோசேப்பு குதிரைகளையும் ஆட்டுமந்தைகளையும், மாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார். இப்படிக் கால்நடைகளையெல்லாம் ஈடாகப் பெற்று அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார். அந்த ஆண்டு முடிந்தபின் அடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து, அவரை நோக்கி, “எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன. எம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர எங்களிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை. உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்” என்றனர்.

அவ்வாறே, யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2023, 10:29