தடம் தந்த தகைமை - எரிகோவைக் கைப்பற்றல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை. கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு, ஆறு நாள்கள் செய்யுங்கள். ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும். அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன், நீங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும்” என்றார்.
யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள். கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர், பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு, ஆறுநாள்கள் செய்தனர்.
ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது, மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்