திருத்தந்தையர் 8ம் அலக்சாண்டர், 12ம் இன்னசென்ட், 11ம் கிளமென்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நேயர்களே! இவ்வாரம் திருத்தந்தை 8ஆம் அலக்சாண்டருடன் நம் வரலாற்றுப் பயணம் தொடர்கிறது.
1610ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெனிஸ் நகரில் Pietro Ottoboni எனற பெயருடன் பிறந்தவர் திருத்தந்தை 8ஆம் அலக்சாண்டர். பதுவா பல்கலைக்கழகத்தில் திருமறை மற்றும் சமூகவியல் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். திருத்தந்தை 8ஆம் உர்பானின் காலத்தில் உரோம் நகருக்கு வந்த இவர் Terni, Rieti, மற்றும் Spoleto நகர்களின் ஆளுநனராக நியமிக்கப்பட்டார். வெனிஸ் குடியரசு கேட்டுக் கொண்டதின் பேரில் திருத்தந்தை 10ஆம் இன்னசென்ட் இவரை 1652ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கர்தினாலாக உயர்த்தினார். 1689ஆம் ஆண்டு இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவரின் வயது ஏறத்தாழ 80. அதன் பின்னர் 16 மாதங்களே உயிருடன் இருந்தார். இவரின் காலத்தில் பிரான்ஸ் அரசுடன் ஆன உறவு மிகவும் சுமுகமாக இருந்தது. பிரெஞ்ச் மன்னர் திருத்தந்தையின் இடமான Avignonனிலிருந்து தன் படைகளை திரும்ப பெற்றதுடன், அதனை திருத்தந்தையிடமே ஒப்படைத்தார். துருக்கியர்களுக்கு எதிரான போரில் தன் சொந்த இடமான வெனிஸுக்கு இவர் நிறைய உதவிகள் செய்தார். ஸ்வீடன் அரசி Christinaவிடம் இருந்த பழங்கால புத்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் வத்திக்கான் நூலகத்திற்கென்று விலை கொடுத்து வாங்கினார். தாராள மனமும், ஏழைகள்பால் அன்பும் கொண்டிருந்த இத்திருத்தந்தை, 1691ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி திடீரென மரணமடைந்தார். திருத்தந்தை 8ஆம் அலக்சாண்டருக்குப்பின் பொறுப்பேற்றார் திருத்தந்தை 12ஆம் இன்னசென்ட். 1615ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி இத்தாலியின் நேப்பல்ஸ்க்கு அருகே Antonio Pignatelli என்ற பெயருடன் பிறந்த இத்திருத்தந்தை, தன் 20ஆம் வயதிலேயே திருப்பீடப் பணிகளில் புகுந்தார். திருத்தந்தை 10ஆம் இன்னசென்டின் கீழ் Tuscanyக்கான தூதுவராகவும், திருத்தந்தை 7ஆம் அலக்சாண்டரின் கீழ் போலந்துக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். திருத்தந்தை 11ஆம் இன்னசென்டால் 1682ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1687ல் நேப்பல்ஸின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1691ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி திருத்தந்தை 8ஆம் அலக்சாண்டர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பத்து நாட்களுக்குப்பின் 11ஆம் தேதி கூடிய கர்தினால்கள் 5 மாதங்கள் வரை பிரான்ஸ் மற்றும் இஸ்பானிய கர்தினால்களின் முரண்பாடுகளால் எவரையும் தேர்வு செய்ய முடியா நிலை ஏற்பட்டது. அதே ஆண்டு ஜூலை 12ஆம் தேதிதான் நேப்பிள்ஸ் பேராயரை தேர்வு செய்தனர். அவரும் 12ஆம் இன்னசென்ட் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். திருத்தந்தை முதல் அருள்பணியாளர்கள் வரை எவரும் தங்கள் உறவினர்களுக்கு உதவுவதை இவர் வன்மையாகத் தடை செய்தார். “ஏழைகளுக்கு நீங்கள் என்ன உதவி செய்கிறீர்களோ, அதை மட்டும் உங்கள் உறவினர்களுக்குச் செய்யுங்கள்” என்றார். 1700ஆம் ஆண்டு ஜூபிலி ஆண்டை சிறப்புற நடத்தினார். இலாத்ரன் பாப்பிறை மாளிகையின் ஒரு பகுதியை ஏழைகளுக்கான மருத்துவமனையாக மாற்றினார். பல பிறரன்பு மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய இவர், ஜூபிலி ஆண்டு 1700ல் செப்டம்பர் 27 அன்று காலமானார்.
1649ஆம் ஆண்டு ஜூலை 23ந்தேதி இத்தாலியின் Urbinoவில் பிறந்த Giovanni Francesco Albani என்பவரே அடுத்து வந்த திருத்தந்தை 11ம் கிளமென்ட். திருத்தந்தை 8ஆம் உர்பானின் கீழ் இத்திருத்தந்தையின் தாத்தா உரோம் நகர் செனட்டராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவரின் தந்தையின் சகோதரர் புகழ்பெற்ற அறிஞராக இருந்தார். வத்திக்கான் நூலகத் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். 11 வயதில் உரோம் நகருக்கு படிக்க வந்த திருத்தந்தை 11ஆம் கிளமென்ட், தன் 18ஆம் வயதிலேயே ஓர் எழுத்தாளராக அறியப்பட்டார். இவரின் அறிவுத்திறமை குறித்து அறிய வந்த ஸ்வீடன் அரசி Christina இவரை தன் சிறப்புக் கல்விக்கழகத்தில் அங்கத்தினராக்கினார். திருஅவைச் சட்டத்திலும், சமூகவியல் சட்டத்திலும் முனைவர் ஆனார். நுணுக்கமான சட்ட அறிவு மட்டுமல்ல, சிறந்த ஒழுக்க சீலராகவும் பக்திமானாகவும் இருந்தமையால், திருப்பீட நீதிமன்றத்தில் படிப்படியாக வளர்ந்தார். தன் 28ஆம் வயதிலேயே ஆயருக்குரிய பணிப்பொறுப்புடன் Rieti, Sabina, மற்றும் Orvieto நகர்களை சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். உரோம் நகரில் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும், பின்னர் திருப்பீடச் செயலராகவும் சேவையாற்றினார். 1690 பிப்ரவரி 13ஆம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அதன் பின்னரே இவர் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1700ஆம் ஆண்டு இடம் பெற்ற திருத்தந்தைக்கான தேர்தலில் கர்தினால் Mariscotti தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பிரான்ஸ் நாடு எதிர்ப்பு தெரிவித்ததால், 46 நாட்களான முயற்சிகளுக்குப்பின் கர்தினால் Albani, அதாவது திருத்தந்தை 11ம் கிளமென்ட் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அப்போது வயது 51தான். அதற்கு முந்தைய திருத்தந்தையர்களோடு ஒப்பிடும்போது இவர் மிகவும் இளைய பாப்பிறையாகும். இத்திருத்தந்தையும் கர்தினால்களின் தேர்வை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்று நாட்கள் மறுத்துப் பார்த்தார். வேறுவழியில்லாமல் கர்தினால்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பாப்பிறைப் பதவியை ஏற்றுக் கொண்டார். 1700 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட இவர், 30ஆம் தேதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, டிசம்பர் 8ஆம் தேதி பாப்பிறையாக முடிசூட்டப்பட்டார். இதுவரை வந்த திருத்தந்தையர்கள் எல்லாம் தாடி வைத்தவர்களாக இருக்க, இவர் ஒருவரே முதன் முதலாக தாடியின்றி பதவியேற்ற திருத்தந்தை. இவர் 21 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார். அமைதியான இந்த மனிதர், ஐரோப்பா முழுமையும் அமைதியில் வாழவேண்டும் என விரும்பினார். ஆனால் ஐரோப்பிய நாடுகளிடையே எழுந்த சண்டைகளை தடுத்து நிறுத்த இவரால் முடியவில்லை. தன் உறவினர்களை திருப்பீடப் பக்கமே இவர் நெருங்க விடவில்லை. ஏழைகள்பால் அன்பு கொண்டிருந்தார். சிறைச்சாலைகளை சீரமைத்தார். அதிக நேரத்தை வேலையில் செலவிட்டதால் சிறிது நேரமே தூங்கினார். தினமும் பாவஅறிக்கையிட்டு, தினசரி திருப்பலி நிறைவேற்றினார். தன்னிடம் வரும் புகார்களை, விண்ணப்பங்களை மிகக் கவனமாக வாசித்தார்.
பிலிப்பீன்ஸ் திருஅவையை ஒருங்கமைத்த இவர், பல இடங்களுக்கு மறைப்பணியாளர்களை அனுப்பினார். இந்தியா மற்றும் சைனா திருஅவைகளுக்கு நல்ல ஊக்கமளித்தார். ஆனால், சைனாவில் இயேசு சபையினர் சைனக் கலாச்சாரத்துடன் இணைந்த வழிபாடுகளை நடத்துவதை இவர் தடைசெய்தது கேள்விக்குரியதாக இருந்தது. இதனால் சைனத் திருஅவை பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது உண்மை. தூய யோசேப்பு மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த இத்திருத்தந்தை 11ஆம் கிளமென்ட், புனித யோசேப்பு திருவிழாவான மார்ச் 19ஆம் தேதி, 1721ல் காலமானார்.
நேயர்களே! இதற்கடுத்து பொறுப்பேற்றவர் திருத்தந்தை 13ஆம் இன்னசென்ட். அடுத்தவாரம் நம் பயணத்தில் அவரின் வரலாற்று பக்கங்களைத் திறப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்