திருத்தந்தையர் வரலாறு - 13ம் இன்னசென்ட், 13ம் பெனடிக்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நேயர்களே! 1721ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி புனித வளன் திருவிழாவன்று காலமான திருத்தந்தை 11ஆம் கிளமென்டைத் தொடர்ந்து பதவிக்கு வந்தார் திருத்தந்தை 13ஆம் இன்னசென்ட. இவரின் இயர்பெயர் மிக்கலாஞ்சலோ தேய் கோந்தி. உரோம் நகரில் 1655ஆம் ஆண்டு மேமாதம் 13ஆம் தேதி பிறந்த இவர் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருத்தந்தை எட்டாம் அலக்சாண்டரே இவரை திருப்பணியில் சேர்த்துக் கொண்டார். 1695ல் பேராயராகவும், Lucerneன் தூதுவராகவும், 1697ல் லிஸ்பனுக்கான(Lisbon) தூதுவராகவும் நியமிக்கப்பட்ட இவர், 1706ல் திருத்தந்தை 11ஆம் கிளமென்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அக்காலத்தின் முக்கிய இத்தாலிய மறைமாவட்டமான Viterbo இவருக்கு 1712ஆம் ஆண்டு வழங்கப்பட்டபோதிலும், இவரால் உடல்நிலை காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. 1719ஆம் ஆண்டு மறைமாவட்டப் பணிகளிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற இவரைத்தான் 1721ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர் கர்தினால்கள். இவர் திருத்தந்தையானவுடன் சிசிலி தீவின் அரசுரிமையை பேரரசர் 6ஆம் சார்லஸ்க்கு வழங்கினார். ஆனால் பேரரசரோ திருப்பீடத்தின் கண்காணிப்பின் கீழ் இருந்த Parma மற்றும் Piacenza என்னும் இத்தாலிய நகர்களை ஸ்பெயின் இளவரசர் Don Carlosக்கு கொடுத்து திருத்தந்தையின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். சைன கலாச்சார வழிபாடுகளை ஏற்பது குறித்த பிரச்னையில் யேசு சபையினருக்கு எதிராக தொமினிக்கன் சபையினரையே ஆதரித்தார் பாப்பிறை 13ஆம் இன்னசென்ட். துருக்கியர்களுக்கு எதிரான போராட்டத்தில் வெனிஸ் நகர மக்களுக்கும் மால்ட்டா நாட்டிற்கும் உதவிய திருத்தந்தை 1724ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி உரோமில் காலமானார்.
1649ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பியெத்ரோ பிரான்செஸ்கோ ஒர்சினி (Pietro Francesco Orsini) என்ற இயற்பெயருடன் பிறந்த திருத்தந்தை 13ஆம் பெனடிக்டே அடுத்து வந்தவர். இவர் மிகவும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோருக்கு மூத்த மகன் மட்டுமல்ல, இத்தாலிய நகரான Braccianoவின் கோமகனாக இருந்த இவரின் பெரியப்பாவிற்கு குழந்தைகள் இன்மையால், அச்சொத்திற்கும் வாரிசுரிமைப் பெற்றவராக இருந்தார். ஆனால், இவரின் விருப்பமெல்லாம் தொமினிக்கன் துறவியாக வேண்டும் என்பதிலேயே இருந்தது. 16 வயதாக இருந்தபோது வெனிஸ் நகர் போகும் வழியில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தொமினிக்கன் நவதுறவியர் மடத்தில் இணைந்து விட்டார். புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் திருத்தந்தை 9ஆம் கிளமென்டை அணுகி, இதனைத் தடுக்குமாறு வேண்டினர். ஆனால் திருத்தந்தையோ, இளைய Orsiniக்கு ஒப்புதல் வழங்கியதோடு, அவர் நவதுறவியாக பயிலவேண்டிய காலத்தையும் பாதியாகக் குறைத்தார். இந்த நவதுறவி Orsini, அடக்கம் மற்றும் பக்தியின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 21ஆம் வயதிலேயே பேராசிரியராக மாறினார். இவரின் உறவினரான திருத்தந்தை 10ஆம் கிளமேன்ட், 1672ஆம் ஆண்டு Orsiniயை கர்தினாலாக உயர்த்தியபோது, அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். இந்த பதவிக்கு தான் தகுதியில்லை என அடம்பிடித்தார். ஆனால் தொமினிக்கன் சபை அதிபரும், திருத்தந்தையும் இணைந்து வலியுறுத்தியதால் கீழ்ப்படிந்தார்.
கர்தினாலாக உயர்த்தப்பட்ட பின்னரும் இவர் தொமினிக்கன் சபை சட்டங்களை பின்பற்றியதுடன் அதே துறவு உடையுடனேயேத் தொடர்ந்தார். 1675ஆம் ஆண்டு இரு பெருமறைமாவட்டங்கள் அவர் முன் வைக்கப்பட்டபோது, Manfredonia என்ற ஏழை உயர்மறைமாவட்டத்தை தேர்ந்து கொண்டு அதன் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தார்.
இவர் தொமினிக்கன் துறவியாகக் கூடாது என துவக்கத்தில் தடுத்த இவரின் தாயும், சகோதரியும், இரு மருமகள்களும் தொமினிக்கன் மூன்றாம் சபையில் இணைந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1680ல் இவர் Cesena மறைமாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். 1686ல் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, Benevento நகருக்கு மாற்றலாகி வந்தார் கர்தினால் Orsini. அங்கு 38 ஆண்டுகள் ஏழைகளிடையே பணியாற்றினார். மருத்துவமனைகளைக் கட்டினார். Benevento நகர் இவர் காலத்தில் இருமுறை நில அதிர்ச்சிக்கு உள்ளானது. அப்போதெல்லாம் மக்களிடையே ஒருவராக எளிமை நிலையில் வாழ்ந்தார் இந்த கர்தினால். இவரிடம் இருந்த ஒரே குறை என்னவெனில், அனைவரையும் நம்பும் மிகவும் எளிய மனிதராக இருந்ததே. இதனால் பலரால் ஏமாற்றப்படும் நிலைக்கும் உள்ளானார். 1724ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் இன்னசென்ட் இறந்தவுடன், கர்தினால்கள் அவை கூடியது. ஏற்கனவே நான்கு திருத்தந்தையர்களின் தேர்வு கூட்டங்களில் கலந்துகொண்ட நம் கர்தினால் ஒர்சினியும் இதில் கலந்துகொண்டார். அப்போது அவரின் வயது 79. இந்த 1724ன் கர்தினால்கள் கூட்டம் இரண்டு மாதங்கள் தொடர்ந்தும் எந்த முடிவும் காணப்படவில்லை. எனவே, விரைவில் புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்குமாறு புனித பிலிப் நேரியின் பரிந்துரையை வேண்டி நவநாள் ஜெபத்தை துவக்கினார் கர்தினால் ஒர்சினி. நவநாள் முடியுமுன்னர் இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தன் வயதையும், உடல் நிலையையும், இயலாமையையும், தகுதியின்மையையும் முன்வைத்து அழுது மறுத்தார் கர்தினால் Orsini. தேர்வு இப்படியே தொடர்ந்தால் அது ஆபத்து என கர்தினால்கள் வலியுறுத்தி, தொமினிக்கன் சபை அதிபரும் விண்ணப்பித்ததால், கண்களில் கண்ணீருடன் ஏற்றுக்கொண்டார் கர்தினால் Orsini.
13ம் பெனடிக்ட் என்ற பெயரை எடுத்துக்கொண்ட கர்தினால் Orsini முதலில் அருள்பணியாளர்களிடையே, திருச்சபை அதிகாரிகளிடையே ஒழுக்கத்தை, எளிய வாழ்வை வலியுறுத்தினார். அமைதிக்கான தன் அர்ப்பணத்துடன், பல மோதல்களுக்கு தீர்வு காண உதவினார். தான் கர்தினாலாக இருந்து நிர்வகித்த Benevento மறைமாவட்டத்தில் தன் பிரதிநிதியாக கர்தினால் Nicolò Coscia என்பவரை நியமித்து, அதனை தன் மறைமாவட்டமாக தொடர்ந்து வைத்துக் கொண்டார் திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட். ஆனால் அந்த கர்தினாலோ உலக விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி, பேராசைப்பிடித்தவராக இருந்ததால், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். நம் திருத்தந்தை 13ம் பெனடிக்ட் 1730ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி உயிரிழந்தபோது, இந்த கர்தினால் Cosciaக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ததுடன், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. புனித வாழ்வை மேற்கொண்ட இத்திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட்டின் இறையியல் எழுத்துக்கள் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
நேயர்களே! 78 வயதில் திருத்தந்தையாகி, கண்பார்வை இழந்தவராய், படுக்கையில் இருந்தே திருஅவையை வழிநடத்தி, சிறந்த நிர்வாகியாக விளங்கிய திருத்தந்தை 12ஆம் கிளமென்ட் குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்