தவக் காலம் 4-ஆம் ஞாயிறு : இயேசுவின் அகப்பார்வை பெறுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 1 சாமு 16: 1b,6-7,10-13a II. எபே 5: 8-14 III. யோவா 9: 1-41)
அக்காலத்தில் பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் ஷா, பீர்பாலின் அறிவுக்கூர்மையை பற்றிக் கேள்விப்பட்டார். வியத்தகு ஆற்றல் படைத்த அந்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக சில நாள்கள் அனுப்பி வைக்குமாறு அக்பருக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பரும், பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருள்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்குச் சென்ற பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பீர்பாலின் அறிவுத்திறனை காண விரும்பினார் பாரசீக மன்னர். மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். அதுவரை பாரசீக மன்னரை பீர்பால் பார்த்ததில்லை. அங்கு ஐந்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அதனால் அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பாலால் கண்டறிய முடியவில்லை. அப்போது அந்த ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, “மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா, “பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?” என்று கேட்டார். “அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்” என்றார் பீர்பால். பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார் பாரசீக மன்னர் ஷா.
இன்று தவக் காலத்தின் நான்காம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இருவேறு பார்வைகள் குறித்துப் பேசுகின்றன. அதாவது, கடவுளின் பார்வைக் குறித்தும் மனிதரின் பார்வைக் குறித்தும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கடவுளின் பார்வை அகம் சார்ந்தது, ஆனால், மனிதரின் பார்வை புறம் சார்ந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் உறுதிசெய்கின்றது. தாவீதை அருள்பொழிவு செய்வதற்காகப் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாயிடம் இறைவாக்கினரான சாமுவேல் அனுப்பப்படுகிறார். அங்குச் செல்லும் சாமுவேல், ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார். அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். இறுதியில், மிகவும் சாதாரண இளைஞனாக அங்கு வரும் தாவீதை அருள்பொழிவு செய்யும்படி ஆண்டவரால் அறிவுறுத்தப்படுகின்றார் சாமுவேல். இதனைத் தொடக்கத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், பின்னர் கடவுளின் அகப்பார்வை கண்டு அதனை உணர்ந்து கொள்கின்றார்.
இதன் பின்னணியில் யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டப்படும் 'பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்' என்ற நீண்ட உரையாடல் குறித்துச் சிந்திப்போம். இன்றைய நம் இந்தியச் சமுதாயத்தில், இவன் முன்னோர் செய்த பாவம்தான் இவன்படும் எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்று கூறக் கேட்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில், இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள் என்று தொடங்கிறது. அப்படியென்றால் யூதச் சமுதாயத்திலும் இந்தப் 'முற்பிறவியின் பயன்' அதாவது, முன்னோர் செய்த தீவினையின் பயனே இக்காலத்தில் அம்மனிதருக்கு நிகழ்கிறது என்ற தவறான கருத்தியல் நிலவியிருக்கிறது என்பது புலனாகிறது. இதுதான் சீடர்கள் கொண்டிருந்த புறப்பார்வை அல்லது இவ்வுலகப் பார்வை எனலாம். ஆனால் இயேசு, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்று கூறுவதன் வழியாக இறைவனின் இரக்கம் இப்பார்வையற்ற மனிதர்மேல் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுவதன் வழியாக, "பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்று கூறி இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தன்னை ஒளியாகப் பிரகடனப்படுத்துகின்றார் இயேசு. மேலும் இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார் என்று செய்திதான் அப்பார்வையற்றவருக்குப் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகின்றது. இதன் பிறகு அக்கம் பக்கத்தாரும், பரிசேயரும், யூதர்களும், ‘நீ எப்படி பார்வை பெற்றாய்’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டு அவரைத் துளைத்தெடுக்கின்றனர். ஆனால், பார்வைபெற்ற அம்மனிதர் அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் தான் வைத்திருந்தார். ‘சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது” என்பதே அப்பதில். இதன் பிறகும் யூதர்கள் அவரை விட்டபாடில்லை. முதலாவதாக, அவர் பெற்றோர் அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். உண்மை புலனாகிறது. ஆனாலும், இரண்டாம் முறையாகவும் அவர்கள் விசாரணை செய்கின்றனர்.
இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு இரண்டு காரியங்களை யூதர்கள் அரங்கேற்றக் காத்திருந்தனர். முதலாவது, பார்வையற்றிருந்த இம்மனிதரின் முன்னோர் செய்த பாவத்தின் விளைவாகத்தான் இவர் பார்வையற்றவராகப் பிறந்தார். ஆகவே, இவர் அந்தப் பாவத்திலேயே மடித்து அழியவேண்டும் என்பதை அவர்கள் நிரூபிக்க விரும்பினார்கள். “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர் என்ற வார்த்தைகள் யூதர்களின் குரூர எண்ணங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவதாக, இயேசுவை ஒரு பாவியாக, ஓய்வுநாள் சட்டத்தை மீறுபவராக, போலி மெசியாவாகக் காட்டவேண்டும் என்று யூதர்கள் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தனர். பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர் என்றும் இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள் என்ற இறைவார்த்தைகள் இந்த இரண்டாம் கருத்துக்குச் சான்றாக அமைகின்றன.
இதில் இன்னொரு முக்கியமான செய்தி ஒன்றும் மறைந்திருக்கின்றது. அதாவது, பார்வைபெற்ற அம்மனிதர் யூதர்களின் மிரட்டல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும், குதர்க்கமான கேள்விகளுக்கும், எள்ளிநகையாடல்களுக்கும், ஏளனப் பேச்சுகளுக்கும் சிறிதும் அஞ்சாமல் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமன்றி, பார்வைபெற்ற அவர் யூதர்களுக்கே பாடங்கள் சொல்லும் அளவிற்கு அகப்பார்வையும் புறப்பார்வையும் பெற்றிருந்ததையும் நாம் காண்கின்றோம். இந்தத் தர்க்கங்களின்போது, ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, “நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள். அதற்கு அவர் “இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். என்ற அவரின் பதில்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
இறுதியாக, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால், நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே, நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகள் வழியாக பரிசேயர்கள்தாம் உண்மையிலேயே பார்வையற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறார் இயேசு.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (குறள் 26) என்ற திருக்குறளில், பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும் என்கிறார் வள்ளுவர். அதாவது, அகப்பார்வைக் கொண்டவர்கள் பிறருக்கு நற்பயன் விளைவிக்கும் பெருமைக்குரிய செயல்களைச் செய்பவர்கள் என்றும், புறப்பார்வையை மட்டுமே கொண்டவர்கள் பிறருக்குத் தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்பவர்கள் என்றும் நாம் வரையறை செய்யலாம். இயேசுவைப் போன்று அகப்பார்வை கொண்டவர்கள் அன்பு, மகிழ்ச்சி, உண்மை, உழைப்பு, நேர்மை, ஓழுக்கம், ஒன்றித்திருத்தல், அக்கறை, சகோதரத்துவம், சமுதாய நலன் ஆகிய உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருப்பார்கள். நன்மையான காரியங்களை செய்வது மட்டுமே இவர்களது வாழ்வின் நோக்கமாக இருக்கும். ஆனால், புறப்பார்வையை மட்டுமே கொண்ட குறுகிய மனம் படைத்தவர்கள் தன்னலம், கர்வம், செருக்கு, அதிகார வெறி, ஆதிக்க மனப்பான்மை, அச்சுறுத்தும் செயல், பிரித்தாளும் சூழ்ச்சி, ஆகிய மனிதத்தை சிதைத்தழிக்கும் கீழ்த்தரமான கொள்கைகளை தங்களின் நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த இருவேறுபட்ட பார்வை கொண்டவர்களைத்தான் இன்றைய நற்செய்தியில் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் இயேசு.
இதனையே, "ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார்.
ஆகவே, என்னைச் சுற்றியுள்ளோரை இயேசுவின் அகப்பார்வை கொண்டு நோக்குகின்றேனா என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திப்போம். இயேசுவைப் போல் எல்லாரையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். நமக்காகவே இறைத்தந்தையால் 'அனுப்பப்பட்டவரான' இயேசு என்னும் 'சிலோவாம்' குளத்திலே மூழ்கிப் புதுப்பார்வை பெறுவோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்