வாரம் ஓர் அலசல் -சீரான பாதையான சிலுவைப்பாதையின் வரலாறு
மெரினா ராஜ்- வத்திக்கான்
வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பாதையும் பயணமும் வேறு வேறு என்றாலும் செல்லும் இடம் என்னவோ ஒன்று தான். நீ நடந்து போக பாதை இல்லை என்று எண்ணாதே, முன்னோக்கிச் செல் பாதை தானாகப் பிறக்கும் என்பதற்கேற்ப தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணிக்க நம்மையும் அழைக்கும் இறை இயேசுவின் பாதை சிலுவைப்பாதை. பாதையில் சிறந்த பாதை அவருடையது. துன்பமும் துயரமும் நிறைந்த துயரபாதை அல்ல அது, துணிவையும் பொறுமையையும் தரும் பொன்னானப் பாதை. நம்மை நேரிய வழியில் நடத்திச் செல்லும் பாதை.
சிலுவைப்பாதை என்றோ எங்கோ நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வல்ல. மானிட வரலாற்றை புரட்டிய, சமூகமாற்றத்திற்கு வித்திட்ட ஒரு போராட்டத்தின் பாதை. கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்ற வாழ்வின் பாதை. தடம்பார்த்து நடந்த மனிதனின் பாதையல்ல இந்த சிலுவைப்பாதை மாறாக, நாம் தடம் பார்த்து நடக்க தடம் பதித்து சென்ற புனிதனின் பாதை. தான் வாழவேண்டும், தன்னுடைய விருப்பமே நிறைவேற வேண்டுமென்று வாழுகின்ற மனிதர்கள் மத்தியில் தன்விருப்பமல்ல, தன் இறைத்தந்தையின் விருப்பமே நிறைவேற வேண்டுமென்று, காயப்பட்டவராய், எதார்த்தங்களை துணிவோடு ஏற்று தன்னையே பலியாக்கியவரான துடிப்புமிக்க 33வயது இளைஞனின் இலட்சியப்பாதை.
போந்தியோ பிலாத்துவின் அரண்மனை முதல் அதாவது இயேசு தீர்ப்பிடப்பட்ட இடம் முதல் அவரது கல்லறை வரை கிறிஸ்துவின் பாதையைப் பின்பற்றும் சிலுவைப்பாதை நிலைகள் திருஅவையில் தவக்காலத்திலும் உயிர்ப்புப் பெருவிழாவிற்கான முன் தயாரிப்புகளின் போதும் மிக அதிகமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில், இந்த பாதை அதிகாரப்பூர்வமாக, துயரம் நிறைந்த பாதை என்றும் சிலுவைப்பாதை என்றும் அழைக்கப்பட்டு இந்த பக்தி காலப்போக்கில் வளர்ந்தும் வந்தது. நமது அன்னைமரியா இயேசு பாடுகள் பட்ட இடத்தை தினமும் பார்வையிட்டதாக வரலாறு கூறுகின்றது. கி.பி 313 இல் கான்ஸ்டன்டைன் அரசன் கிறிஸ்தவத்தை சட்டப்பூர்வமாக்கிய பிறகு, இந்த பாதை அதன் முக்கியமான நிலையங்களுடன் குறிக்கப்பட்டது.
ஐந்தாம் நூற்றாண்டில், புனித தலங்களை அதிகப்படுத்துவதில் திருஅவை ஆர்வம் காட்டியது. புனித பூமிக்கு உண்மையில் பயணிக்க முடியாத திருப்பயணிகள், தங்கள் இதயங்களில் பக்தியுடன் அந்நிலைகளைத் தியானித்து, ஆன்மீக வழியில் அவ்வாறு செய்ய முடியும் என்றும் வலியுறுத்தியது. புனித பூமியில் உள்ள ஆலயங்கள் போன்றே சில ஆலயங்கள் எழுப்பப்பட்டன. உதாரணமாக, இத்தாலியின் போலோஞ்னா மறைமாவட்ட ஆயர் புனித பெட்ரோனியஸ், புனித ஸ்தேவான் ஆலயத்தை புனித பூமியில் உள்ள ஆலயங்களின் சாயலில் கட்டி அதில் சிலுவைப்பாதை நிலைகளையும் வடித்தார். இதுவே வாஷிங்டனில் உள்ள பிரான்சிஸ்கன் ஆலயத்தைக் கட்டியெழுப்ப ஊக்கமளித்தது. 1342 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையினர் புனித பூமியில் உள்ள ஆலயங்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். நம்பிக்கையுள்ள திருப்பயணிகள் அனைவரும், சிலுவைப்பாதை நிலைகளில் செபித்து ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றனர்.
பிலாத்துவின் வீட்டில், இயேசு தனது தாயைச் சந்தித்தல், எருசலேம் நகரப் பெண்களுடன் பேசுதல், சீரேனைச் சார்ந்த சீமோனைச் சந்தித்தல், வீரர்கள் இயேசுவின் ஆடைகளை கழற்றுதல், சிலுவையில் இயேசு அறையப்படல், அவர் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை என அனைத்தும் சிலுவைப்பாதை நிலையில் இடம்பெற்று நினைவுகூரப்பட்டன. வில்லியம் வே,என்னும் ஓர் திருப்பயணி, 1458 ஆம் ஆண்டு புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். கல்வாரி மலையிலிருந்து பிலாத்துவின் வீட்டிற்குச் செல்வதாக, தலைகீழாக இருந்த சிலுவைப்பாதை நிலைகளை பிலாத்துவின் வீட்டிலிருந்து கல்வாரி மலைக்குச் செல்வது என மாற்றி அப்பாதையை வழக்கமாகக் கொண்டுவந்தார். 1462ஆம் ஆண்டு மீண்டும் சிலுவைப்பாதை நிலைகள் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
இஸ்லாமியர்கள் புனித பூமிக்கு மக்கள் செல்வதைத் தடுத்தபோது,கார்டோவாவில் உள்ள டொமினிகன் துறவற இல்லம் மெசினாவின் துறவற இல்லம் Nuremberg (1468); Louvain (1505); Bamberg, Fribourg and Rhodes (1507); and Antwerp (1520) உள்ளிட்ட பிரபலமான பல ஆன்மீக மையங்களில் சிலுவைப்பாதை நிலைகளின் பகுதிகள் அமைக்கப்பட்டன. தகுதியான மற்றும் திறமையான கலைஞர்களால் சிலுவைப்பாதை நிலைகளின் உருவங்கள் வடிக்கப்பட்டு இன்று வரை தலைசிறந்த படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. 1587 ஆம் ஆண்டில் புனித பூமியில் இந்த பக்தியை தடுத்து நிறுத்தி சிலுவைப்பாதை நிலையங்களுக்கு வணக்கம் செலுத்தவோ அல்லது வேறு எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவோ கூடாது" என்று Zuallardo அறிவித்தார். ஆயினும்கூட, ஐரோப்பாவில் இப்பக்தி தொடர்ந்து பிரபலமடைந்தது.
இலாசர் பணக்காரர் கதையில் வரும் பணக்காரர் டைவ்ஸின் இல்லம், கிறிஸ்து கடந்து சென்ற நகர வாயில், ஏரோது, பரிசேயர், சீமோன் ஆகியோரின் இல்லங்களும் தொடக்கத்தில் சிலுவைப்பாதை நிலைகளில் இருந்தன. 16 ஆம் நூற்றாண்டில், சிலுவைப்பாதை பக்தி பற்றிய புத்தகங்கள் குறிப்பாக கீழைநாடுகளில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொறு செபத்துடன் கூடிய நிலைகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆலயங்களில் சிலுவைப்பாதை நிலைகள் அமைப்பது மிகவும் பிரபலமானது. 1686 ஆம் ஆண்டில், திருத்தந்தை XI இன்னசென்ட் அவர்கள், இஸ்லாமியர் ஒடுக்குமுறை காரணமாக ஒரு சிலரே புனித பூமிக்கு பயணிக்க முடியும் என்பதை உணர்ந்து, பிரான்சிஸ்கன் துறவறத்தார் தங்கள் ஆலயங்கள் அனைத்திலும் சிலுவைப்பாதை நிலைகளை அமைக்கும் உரிமையை வழங்கினார். இதன் வழியாக உண்மையாகவே புனித பூமியில் பக்தியுடன் திருப்பயணம் மேற்கொள்வது போன்ற மகிழ்ச்சியை மக்களுக்கு அளித்தார். திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட் அவர்கள், 1726 ஆம் ஆண்டில் அனைத்து விசுவாசிகளுக்கும் இந்த ஆசீர்வாதங்களை நீட்டித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திருத்தந்தை 12ஆம் கிளமென்ட் அனைத்து ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நிலைகளை நிறுவ அனுமதித்ததுடன் எண்ணிக்கையை 14 ஆக நிர்ணயித்தார். 1742 இல், திருத்தந்தை XIV பெனடிக்ட் அனைத்து அருள்பணியாளர்களும் தங்கள் ஆலயங்களை வளப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
இன்றுவரை, 14 பாரம்பரிய சிலுவைப்பாதை நிலைகள் உள்ளன: பிலாத்து கிறிஸ்துவை மரணத்திற்குக் தீர்ப்பிடல், இயேசு சிலுவையைச் சுமத்தல், முதல் முறை கீழே விழுதல், அன்னை மரியாவை சந்தித்தல், சிரேன் ஊர் சீமோன் உதவுதல், வெரோனிகா இயேசுவின் முகத்தைத் துடைத்தல், இரண்டாவது முறை கீழே விழுதல், எருசலேம் பெண்களுக்கு ஆறுதல், மூன்றாவது முறை கீழே விழுதல், இயேசுவின் ஆடைகள் களையப்படுதல், இயேசு சிலுவையில் அறையப்படுதல், உயிர்விடுதல், அன்னை மரியாவின் மடியில் கிடத்தப்படுதல், கல்லறையில் அடக்கம் செய்யப்படுதல், போன்றவை 14 சிலுவைப்பாதை நிலைகளாக இடம்பெற்றுள்ளன. இறைவனின் உயிர்த்தெழுதலுடன் அவரது பாடுகளுக்கும் மரணத்திற்கும் இடையே உள்ள உள்ளார்ந்த உறவின் காரணமாக, பல பக்தி சிறுபுத்தகங்கள் சில இப்போது உயிர்த்தெழுதலை நினைவுகூரும் "பதினைந்தாவது" நிலையத்தையும் உள்ளடக்கியுள்ளன.
சிலுவைப்பாதை பலன்கள்
திருத்தந்தை 11-ம் பத்திநாதர் அவர்கள், சிலுவைப்பாதை பலன்களை மக்களுக்கு அளித்தார். தனது பாவங்களுக்காக மனம் வருந்தி தனியாகவோ அல்லது மற்றவர்களோடு சேர்ந்தோ சிலுவைப்பாதை செய்யும் ஒவ்வொரு முறையும் (Toties quoties) ஒரு பரிபூரணப் பலன் நாம் பெறுகிறோம். சிலுவைப்பாதை செய்யும் அதே நாளில் நற்கருணை உட்கொண்டால் பரிபூரணப் பலன் பெறலாம். அல்லது பத்துமுறை சிலுவைப் பாதை செய்தபின் ஒரு மாதத்துக்குள் நற்கருணை உட்கொண்டால் ஒரு பரிபூரணப் பலன்பெறலாம். சிலுவைப்பாதை செய்துகொண்டிருக்கும் போது நியாயமான காரணத்தை முன்னிட்டு அதை முடிக்கக் முடியாமற்போனால், அது வரையில் சந்தித்த நிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பலன்கள் பெறலாம். நோயாளிகள், பயணிகள், சிறையிலிருப்பவர்கள், கிறிஸ்தவத்தை அறியாத பிற நாடுகளில் வசிப்பவர்கள், நியாயமான காரணத்தை முன்னிட்டு, சிலுவைப்பாதை செய்ய முடியாதவர்கள், சிலுவைப் பாதை துன்பங்களை எடுத்துரைக்கும் பாடுபட்ட இயேசுவின் திருச்சிலுவை உருவத்தைக் கையில் பிடித்துக் கொண்டு 20 விண்ணகத்தந்தையை நோக்கிய செபம், 20 மங்கள வார்த்தை செபம், 20 தமத்திரித்துவ செபம் செபித்தால் பரிபூரண பலன் அடையலாம். அதிக நோய்வாய்ப்பட்டவர்கள், இந்த செபங்களை செபிக்க இயலாதவர்கள், திருச்சிலுவையை முத்தம் செய்தோ அன்புடன் அதைப் பார்த்தோ திருப்பாடுகளை நினைத்து ஒரு சிறு மனவலிய செபம் செய்தால் பரிபூரண பலனடையலாம்.
சிலுவையின் வழியை பக்தியுடன் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு முழுமையான இன்பம் வழங்கப்படுகிறது. ஆலயத்திற்குச் செல்ல முடியாதவர்கள், இறைவனின் பாடுகளையும் மரணத்தையும் அரை மணி நேரம் பக்தியுடன் படித்து தியானிப்பதன் வழியாக அதே மகிழ்ச்சியைப் பெறலாம். இயேசு அன்று பயணித்த பாதையில் நாம் நம் பாதங்களைப் பதிக்க இன்று நம்மை அழைக்கிறார். நமது பாதையை நாமே தேர்ந்தெடுப்போம். ஏனெனில் நம்மையன்றி நமது கால்களால் வேறு எவராலும் நடக்க முடியாது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வுடன் எடுத்து வைக்க இறைவனின் இரக்கத்தை வேண்டுவோம். நமது வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நாமும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் இரக்கமுள்ளவர்களாய் வாழ, உடனிருப்பவர்களோடு இரக்கத்தைப் பகிர கருணை இறைவனின் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்வோம். சிலுவைப்பாதையில் இயேசுவின் பாடுகளில் அவரோடு உடன்நடந்தவர்கள், அவருக்கு உடனிருந்து உதவியவர்கள், அவர் நிலைகண்டு கலங்கியவர்கள் என்று அனேகர் கல்வாரிப்பாதையின் பிம்பங்களாக நம்முன் காட்சிதருகிறார்கள். அந்த பிம்பங்களின் வழியாக இயேசுவின் பாடுகளைத் தியானிப்போம். பார்வையாளராய் பங்கேற்க ஏராளமானோர் இருக்கிறார்கள், பங்கேற்பாளராய் பங்கேற்க பலர் இருக்கிறார்கள் ஆனால் பயணிப்பவர்களாய் உடன் நடக்க யாருமில்லை. உடன்பயணிக்க நாம் தயாரென்றால் நம்மையே இக்கல்வாரிப்பயணத்தில் இணைத்துக் கொள்வோம். சிலுவைப்பாதை வழி நம் வாழ்வை செழிப்பாக்க நம் சிந்தனையை சீர் செய்ய முன்வருவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்