தடம் தந்த தகைமை : ‘அமலேக்கியரோடு போர்!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாறையிலிருந்து இறைவன் அளித்த தண்ணீரைப் பருகிய பிறகு, அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசேவுடன் ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். இதனால் மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். மோசேயின் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்’ என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை” என்றார். மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு ‘யாவே நிசீ என்று பெயரிட்டு அழைத்தார். ஏனெனில், “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்” என்றுரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்