சண்டையிடும் இஸ்ரயேலர் சண்டையிடும் இஸ்ரயேலர் 

தடம் தந்த தகைமை - கேராவின் மகன் ஏகூத்துடன் கடவுள்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, பேரீச்ச நகரைக் கைப்பற்றினான். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார். அவர் இடக்கை மனிதர். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர். ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார். அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார். அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார். எக்லோன் மிகவும் பருத்த மனிதன். ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார். அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, “மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது” என்றார். அவன் “அமைதி” என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர். ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, “உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார். வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழுப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது. ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார். அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.

அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான். அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார். அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார். அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர். அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பவில்லை. அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.

சம்கார்

ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார். அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2023, 14:12