தடம் தந்த தகைமை – இஸ்ரயேல் மக்களுக்கான நீதிபதிகள் நியமனம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மோசே மக்களுக்கு நீதிவழங்க அமர, காலை முதல் மாலைவரை மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். “நீர் மக்களுக்குச் செய்துகொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலைமுதல் மாலைவரை உம்மைச்சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?” என்று அவர் கேட்டார். மோசே தம் மாமனாரை நோக்கி, “கடவுளின் தீர்ப்பை நாடி மக்கள் என்னிடமே வருகின்றனர். அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர, ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்” என்றார். மோசேயின் மாமனார் அவரை நோக்கி, “நீர் செயல்படும் முறை சரியல்ல. நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது. இப்போது, நான் சொல்வதைக் கேளும். உமக்கோர் அறிவுரை கூறுகிறேன். கடவுள் உம்மோடு இருப்பாராக! கடவுளின் திருமுன் நீர் மக்களின் பதிலாளாக இருந்து அவர்கள் விவகாரங்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்வீர். நியமங்களையும் சட்டங்களையும் பற்றி நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியையும், அவர்கள் ஆற்றவேண்டிய பணியையும் நீர் அவர்களுக்கு அறிவிப்பீர். மேலும், மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர். அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர். கடவுள் கட்டளையிடும் இக்காரியத்தை நீர் செய்தால், உம்மால் பளுவைத் தாங்க இயலும்; இம் மக்கள் அனைவரும் தம்தம் இடத்திற்கு மன அமைதியுடன் செல்வர்” என்றார். மோசே தம் மாமனாரின் சொல்லைக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்