இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தின் முன் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தின் முன் மோசே  

தடம் தந்த தகைமை - வன்முறைச் செயல்களுக்கான தண்டனை

பிறர்மேல் வெகுண்டெழுந்து, சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார். தம் தந்தையையோ தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் மக்களின் வன்முறைச் செயல்களுக்கான தண்டனையாக ஆண்டவர் மோசேயிடம் கூறியது. மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும். அவர் சாகடிக்கப் பதுங்கி இராதிருந்தும் அவரது கையாலேயே கொல்லப்படக் கடவுள் விட்டிருந்தால், அத்தகையவர் தப்பியோட ஓர் இடத்தை நான் ஏற்பாடு செய்வேன். ஆனால், பிறர்மேல் வெகுண்டெழுந்து, சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார். தம் தந்தையையோ தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும். ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்பட வேண்டும். தம் தந்தையையோ தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும். இருவர் சண்டையிடுகையில், ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும், தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து, பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால், தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார். ஆயினும், அவரது வேலையிழப்பை முன்னிட்டு அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.

ஒருவர் தம் அடிமையை அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க, அவர் அங்கேயே இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார். ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இன்னும் உயிரோடிருந்தால், அவர் பழிவாங்கப்படார். ஏனெனில், அடிமை அவரது சொத்து. ஆள்கள் சண்டையிடுகையில், கர்ப்பிணியான பெண்ணுக்கு அடிபட, வேறு யாதொரு கேடும் இன்றிப் பேறுகாலத்துக்குமுன் பிரசவமாகிவிட்டால், அப்பெண்ணின் கணவன் கேட்கிறபடி தண்டம் விதிக்கப்பட்டு, நடுநிலையாளர் வழியாக அது கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்; சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்; கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய். ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க, அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால் கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும். ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால், பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2023, 11:56