விடுதலையிலும் அமைதியிலும் மியான்மார் மக்கள் எழ உதவுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மியான்மார் இராணுவத்திற்கும் சிறுபான்மை சமுதாய புரட்சிக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில், அவர்கள் சார்பாக நாட்டின் அமைதிக்கும் சுதந்திர உணர்வுக்கும் அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் சார்லஸ் போ.
ஒரே நாடாக, ஒரே மக்களாக ஒன்றிணைந்து, வெறுப்பு, மற்றும் மனித துயர்கள் எனப்படும் கல்லைப் புரட்டி, இயேசுவின் உயிர்ப்புச் செய்தி நம்மிலும், நம் தெருக்களிலும் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்திட அனுமதிப்போம் என தன் இயேசு உயிர்ப்பு வாழ்த்துச் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் கர்தினால் போ.
இயேசுவின் கல்லறைக் கல் புரட்டப்பட்டதுபோல், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கல்லைப் புரட்டி இயேசு கிறிஸ்து கொணர்ந்த புதிய வாழ்வின் சுதந்திரத்தையும் மகிழ்வையும் அனுபவிப்போம் என உரைத்த கர்தினால் போ அவர்கள், நம் மகிழ்வு மற்றவரிலும் பரவி, விடுதலையிலும் அமைதியிலும் அவர்களும் எழ உதவட்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மியான்மார் நாட்டின் கத்தோலிக்கர்கள் நீதி மற்றும் சரிநிகர்தன்மைக்கு ஆதரவாக உழைத்து அமைதியை உருவாக்குபவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்த மியான்மார் ஆயர்பேரவைத் தலைவர், கர்தினால் போ அவர்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏழைகள் மற்றும் துன்புறும் மக்களுக்காகவும் உழைக்கவேண்டியது கத்தோலிக்கர்களின் கடமை என்பதையும் நினைவூட்டினார்.
அரசு இராணுவத்திற்கும் புரட்சி குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலில் அடைக்கலம் தேடி அப்பாவி மக்கள் கத்தோலிக்கக் கோவில்களிலும் கத்தோலிக்க நிறுவனங்களிலும் தங்கியுள்ளதால், அவ்விடங்களை அரசு இராணுவம் தாக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்