உயிர்ப்பை சித்தரிக்கும் சிறு சிலை பிரதமருக்கு பரிசளிக்கப்பட்டது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயேசு உயிர்ப்பு விழா மாலையில் புதுடெல்லியின் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தை இந்திய பிரதமர் சந்திக்க வந்தது, அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கும் வழிகளைத் திறந்துள்ளது என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் தலத்திருஅவை அதிகாரிகள்.
ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் கத்தோலிக்கர்கள் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்துக் கொண்டிருந்த வேளையில், அன்று மாலை புது டெல்லியின் திருஇருதய ஆண்டவர் கோவிலை தரிசிக்க வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியின் பிஜேபி கட்சியுடன் தொடர்புடைய வலதுசாரி இந்து குழுக்கள் கிறிஸ்தவர்களைத் தாக்கிவரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசுடன் துவக்க இந்திய பிரதமரின் இந்தச் சந்திப்பு வழி திறந்துள்ளது என நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்ப்பு விழா வாழ்த்துக்களைத் தெரிவிக்க பிரதமர் மோடி அவர்கள் பேராலயத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அவர் எவரிடமிருந்தும் ஒதுங்கியிருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது எனவும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் டெல்லி பேராயர் Anil Joseph Couto.
25 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி அவர்கள் உயிர்த்த இயேசு திருவுருவம் முன் ஒரு மெழுகுத் திரியை ஏற்றியதும், சிறுமிகள் பாடிய மூன்று உயிர்ப்புவிழாக் கீதங்களை இரசித்ததும், உயிர்த்த இயேசுவை சித்தரிக்கும் சிறு திருஉருவத்தை டெல்லி பேராயர் பிரதமருக்குப் பரிசளிக்க, அதை பிரதமரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கன.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்