புனித பூமியில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம் புனித பூமியில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்  

எருசலேமில், எந்தவொரு திருப்பயணியும் வன்முறையில் ஈடுபட்டதில்லை

புனித பூமியில் திருப்பயணிகள் இருக்கும்போது, வன்முறை குறைவாக இருக்கும், அவ்விதத்தில் பார்க்கும்போது திருப்பயணிகள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எருசலேம், அனைத்து நாட்டு மக்களுக்குமான இறைவேண்டலின் வீடு என்று கூறியுள்ளார் புனித பூமியிலுள்ள கப்புச்சின் சபையின் மாநிலத் தலைவர் அருள்பணியாளர் Francesco Patton, OFM.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள அருள்பணியாளர் Patton, புனித பூமியில் பதட்டங்கள் இருந்தபோதிலும், புனித வாரக் கொண்டாட்டங்கள் அழகாகத் தொடர்கின்றன என்றும், இங்கே அதிகத்  திருப்பயணிகள் இருக்கும்போது, ​​​​அதிக வன்முறைகள்  நடைபெறுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புனித பூமியில் வன்முறையின் அதிகரிப்பு, கிறிஸ்தவ அடையாளங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் இந்நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ள அருள்பணியாளர் Patton, திருப்பயணிகள் மீண்டும் புனித பூமிக்கு வந்துள்ளதாகவும், அதன் நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பின் அழகிய காட்சிகளால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

‘Pro Terra Sancta’ என்ற 'புனித பூமிக்கான சேகரிப்பு'  எவ்விதத்தில் முக்கியமானது? என்ற கேள்விக்குப் பதிலளித்த அருள்பணியாளர் Patton, இது புனித பூமியின் பாதுகாப்பிற்கான முதல் பொருளாதார ஆதாரம் என்றும், புனித தலங்களைப் பராமரிப்பதற்கும், பங்குத் தளங்களில் பல்வேறு பணிகளை நிலைநிறுத்துவதற்கும் கிறிஸ்தவப் பள்ளிகள் வழியாக நமது கல்விப் பணியைத் தொடர்வதற்கும், ஏழைகள் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இதுவே முக்கியமான ஆதாரமாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

புனித பூமியில் நிகழ்ந்து வரும் பதட்டங்கள் குறித்து உங்களின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துவதே நமக்கு மிகவும் முக்கியமானது என்றும், ‘அஞ்சாதீர்கள்’ என்ற   இயேசுவின் வார்த்தைகளை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றும்,  நம்முடைய பலம் மனித வளங்களிலிருந்து அல்ல, மாறாக, தூய ஆவியாரிடமிருந்தும், இயேசுவுடனான உறவிலிருந்தும் வருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் அருள்பணியாளர் Patton.

அங்கு நிகழ்ந்த வன்முறை புனித வாரக் கொண்டாட்டங்களைப் பாதித்ததா? இது திருப்பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளதா அல்லது குறைத்துள்ளதா என்ற கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, திருப்பயணிகள் இருக்கும்போது, ​​வன்முறை குறைவாக இருக்கும். அவ்விதத்தில் பார்க்கும்போது, திருப்பயணிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றும், அவர்கள் இல்லாதபோது, வன்முறையாளர்களுக்கு வன்முறையைத் தூண்டுவது எளிதாக இருக்கின்றது என்றும் விவரித்தார் அருள்பணியாளர் Patton.

புனித பூமியின் Custos என்பது மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் வாழும் கப்புச்சின் அருள்பணியாளர்களின் (Friars Minor) மாநிலத் தலைவர் ஆவார். அவர் இஸ்ரயேல், பாலஸ்தீனம், யோர்தான், லெபனோன், எகிப்து (பகுதி), சைப்ரஸ் மற்றும் ரோட்ஸ் மற்றும் உரோமை மற்றும் வாஷிங்டன் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான கப்புச்சின் துறவு இல்லங்கள்மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 13:45