குடிபெயர்ந்தோர் குறித்து Scalabrini துறவுசபையின் ஆய்வு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குடிபெயர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடையேப் பணியாற்றும் திருஅவை அமைப்புக்கள், சமுதாய குழுக்கள் மற்றும் அரசு அமைப்புக்களுக்கு நல்வழிகாட்டிகளை வழங்கும் நோக்கத்தில் ஆய்வுப்பணி ஒன்றைத் துவக்கியுள்ளது Scalabrini எனும் கத்தோலிக்க துறவு சபை.
பிலிப்பீன்சின் மணிலா Scalabrini துறவுசபையின் குடிபெயர்ந்தோர் மையம், குடிபெயர்வால் பிரிந்துவாழும் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாடுகளின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் குடும்பங்களில் இடம்பெற்ற பாதிப்புக்கள் குறித்து அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
2019ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, உலகில் 54 இலட்சம் குடிபெயர்ந்தோர் வாழும் நிலையில் இதில் பெரும்பான்மையினோர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரகள்.
குடிபெயர்வுகளால் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய குடும்பங்களிடையே ஆய்வுகளை நடத்திவரும் Scalabrini துறவுசபையினர், இவ்வாய்வின் வழி அரசுகள், கல்வியாளர்கள், அரசு சாரா அமைப்புக்கள், சமுதாய குழுக்கள், திருஅவை அமைப்புக்கள் ஆகியவைகளின் குடிபெயர்ந்தோரிடையேயான பணிக்கு உதவ உள்ளன.
குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகளிடையே சிறப்புப் பணியாற்றிவரும் Scalabrini துறவு சபை 1887ல் இத்தாலியில் துவக்கப்பட்டு, நூறாண்டுகளுக்குப்பின், அதாவது 1987ல் மணிலாவில் குடிபெயர்ந்தோர் மையத்தை உருவாக்கியது. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்