பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் போராட்டம் (கோப்புப்படம்) பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் போராட்டம் (கோப்புப்படம்)  (AFP or licensors)

நீதித்துறையின் மேன்மையைப் பாதுகாக்க இலங்கை ஆயர்கள் கோரிக்கை

பாராளுமன்றத்தின் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பறிக்கிறது : இலங்கை ஆயர்பேரவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அந்நாட்டின் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அரசியலமைப்பை நிலைநாட்டுமாறு இலங்கை அரசை தாங்கள் கடுமையாக வலியுறுத்துவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் எந்தத் தேவையற்ற நடவடிக்கையையும் தொடர வேண்டாம் என்றும் ஏப்ரல் 03, இத்திங்களன்று, வெளியிட்ட அதன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.

உள்ளாட்சித் தேர்தலுக்கு நிதி ஒதுக்குமாறு அரசிடம் கோரிய நீதிபதிகளுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர் ஆயர்கள்.

இலங்கை அரசின் இச்செயல் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தீவிரமான மற்றும் தேவையற்ற அத்துமீறலாகும் என்றும் எச்சரித்துள்ளனர் ஆயர்கள்.

பாராளுமன்றத்தின் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற அத்துமீறலை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்

நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என 2 கோடியே 20  இலட்சம் மக்களைக் கொண்ட இலங்கை நாட்டுக்குத் தலைமை தாங்கும் இடைக்கால அரசுத் தலைவரான இரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 13:55