சீனாய் மலைமீது இறங்கிய ஆண்டவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, “இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய். அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்று சொன்னார். மோசே ஆண்டவரிடம், “சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள். ஏனெனில், ‘மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து’ என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்” என்றார். ஆண்டவர் அவரை நோக்கி, “நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்; இல்லையெனில், ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்றார். மோசே கீழே இறங்கி, மக்களிடம் இதுபற்றிக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்