தொடர்ந்து குறிவைக்கப்படும் கத்தோலிக்க ஆதரவற்றோர் இல்லங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கத்தோலிக்க ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளை அகற்ற முயற்சி செய்வதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, மத்திய அரசின் அதிகாரிகள், அவ்வில்லங்களைத் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர் என்று அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழு (CWC) மே 15 அன்று சாகர் மறைமாவட்டத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவதம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 26 சிறுவர் மற்றும் சிறுமிகளை இரண்டு நாட்களுக்குள் அரசு நடத்தும் காப்பகத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்த வேளை, இவ்வாறு அதன் நிர்வாகிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள புனித பிரான்சிஸ் சேவதம் ஆதரவற்றோர் இல்லத்தில் இயக்குநர் அருள்பணியாளர் Sinto Varghese அவர்கள், அரசு நிறுவனங்கள் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்துவதால் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்துவது எங்களுக்கு மிகவும் கடினமாகி வருகிறது என்று யூகான் செய்தி நிறுவனத்திடம் கவலை தெரிவித்துள்ளார்.
"இது வருந்தத்தக்க நிலை" என்று வர்ணித்துள்ள அருள்பணியாளர் வர்கீஸ், மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அவர்கள் துன்புறுத்தல் காரணமாக, நாங்கள் மூன்றாவது முறையாக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார்.
எங்களுடைய தவறு என்ன? ஏழைகளுக்கு பாணியாற்றுவதால்தான் இப்படி எங்களை நடத்துகிறார்களா? எங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனங்களே, மீண்டும் மீண்டும் எங்களைத் துன்புறுத்துவதால் இதுபோன்ற விரோதமான சூழலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் வர்கீஸ்.
நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த ஆதரவற்றோர் இல்லம், 2020-ஆம் ஆண்டு அரசிடம் தனது பதிவை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்தது. ஆனால், இவ்வில்லத்தில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு சிறுவன் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்