புன்னகையுடன் அன்னை மரியா புன்னகையுடன் அன்னை மரியா  

நேர்காணல் – அன்னையின் வணக்க மாத வரலாறு பகுதி 1

அன்னை தெய்வத்திற்கு நிகராக அதாவது ஈன்றாளோடு எண்ணக் கடவுளும்இல் என்று போற்றப்படுகின்றார். இத்தகைய தாய்மைக்கெல்லாம் சிறந்த உதாரணமாய்த் திகழ்பவர் அன்னை மரியா.
அன்னையின் வணக்க மாத வரலாறு - அருள்பணி சூசைமணி osm

மெரினா ராஜ் – வத்திக்கான்

உறவுகளால் சூழப்பட்ட இந்த மனித வாழ்வில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தது. .....என் செயினும் தாயின் சிறந்த தமரில்லை என்ற நான்மணிக்கடிகையின் வரிகள், தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய தாயை விடச் சிறந்த உறவு வேறில்லை என்றுக் குறிப்பிடுகிறது. மனித உறவுகளில் தலைச்சிறந்த உறவாக போற்றப்படுவது தாய்மை.. ஒரு குழந்தையை இச்சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவது தாய். அவளின் வளர்ப்பு மூலம் அக்குழந்தை நற்பண்புகளை பெற்று திகழ முடியும். அதன் காரணமாகத்தான் அன்னை தெய்வத்திற்கு நிகராக அதாவது ஈன்றாளோடு எண்ணக் கடவுளும்இல் என்று   போற்றப்படுகின்றார். இத்தகைய தாய்மைக்கெல்லாம் சிறந்த உதாரணமாய்த் திகழ்பவர் அன்னை மரியா.

அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் இம்மே மாதத்தில் வணக்க மாதத்தின் சிறப்பு பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி சூசைமணி. மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்பணி சூசைமணி அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமணம் கிராமத்தைச் சார்ந்தவர். தத்துவஇயலில் முனைவர் பட்டமும் இறையியலில் முதுகலைப் பட்டமும் மரியியலில் சில பட்டயப் படிப்புக்களையும் முடித்தவர். மரியின் ஊழியர் சபையின் ( இந்தியா, மியான்மர், பதுவா, லாஸ்ஏஞ்சல்ஸ் இருக்கும் குழுமத்தின்) இந்திய மாநிலத்தலைவராகப் பணியாற்றியவர். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா செர்வைட் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர், செங்கல்பட்டு மறைமாவட்ட துறவிகளுக்கான ஆயரின் பதில் குரு, தமிழ்நாடு பாண்டிச்சேரி இந்திய துறவிகள் கூட்டத்தின் சிறப்பு உறுப்பினர்  என பல பொறுப்புக்களைத் திறமையுடன் ஆற்றியவர். திருச்சி புனித பவுல் கல்லூரி, அமலாசிரமம், கோயம்புத்தூர்  நல்லாயன் கல்லூரி, ஒரிசா, வேளாங்கன்னி, சென்னை ஒக்கியம்பேட்டை, வெப்பூர், ஞானோதயா போன்ற இடங்களில் உள்ள கல்லூரிகளிலும், சபையின் பயிற்சி இல்லங்களிலும் பணியாற்றியவர். சபையின் அருளாளர்கள், யார் இந்த மரியா? மரியுண்மைகள், அப்படியே ஆகட்டும், அறிவோம் அன்னையை, கேள்விகளின் நாயகன் இயேசு,  நம் வாழ்விற்கு தேம்பாவணி, இயேசுவின் மனநிலையில், தமிழ் மண்ணின் மரியாவும், வீரமாமுனிவரும், என்பன இவரது தமிழ் படைப்புக்களாகும். இது போல ஆங்கில மொழியிலும் பல்வேறு படைப்புக்களையும், கருத்தரங்குகளையும் அளித்து சிறப்புற்றுள்ளார்.

அன்னையின் வணக்க மாத வரலாறு பற்றிய செய்திகளின்  தொடர்ச்சியை வரும் வாரத்தில் நாம் காணலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2023, 09:26