அன்னாவும் ஏலியும் அன்னாவும் ஏலியும் 

தடம் தந்த தகைமை : அன்னாவும் ஏலியும்!

“மனநிறைவோடு செல், நீ விண்ணப்பித்த உனது உள்ளத்தின் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுள் கேட்டருள்வார்.”

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது”  என்று பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டார்.

அன்னா இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை, ஆகவே, ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, “எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து” என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.

பிறகு ஏலி, “மனநிறைவோடு செல், நீ விண்ணப்பித்த உனது உள்ளத்தின் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுள் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார், அதற்கு அன்னா, “உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக!” என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2023, 11:46