விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-5, தீமை விலக்கி நன்மை செய்வோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘‘பாவ அறிக்கை செய்வோம்!’ ' என்ற தலைப்பில் 38-வது திருப்பாடலில் 16 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 19 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து சிந்தித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது பக்தி உணர்வுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்; வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்; நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்; ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும். என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும் (வசனம் 19-22)
அண்மையில் இணையதளத்தில் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியிருந்த செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குளாகியது. அந்தச் செய்தியை அப்படியே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். திருச்சி மாவட்டம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் சோலூர்பட்டியை சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவன் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சில மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. அப்போது சக மாணவர்கள், அங்கிருந்த மவுலீஸ்வரன்தான் இதனைச் செய்திருக்க வேண்டும் எனத் தவறாக எண்ணிக்கொண்டு அவனைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மவுலீஸ்வரனை அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக அவசர ஊர்தியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மவுலீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அம்மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு அவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து மவுலீஸ்வரனை தாக்கிய 3 மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்று அந்தச் செய்தி முடிவடைகிறது. அன்பும், அமைதியும் சகோதரத்துவமும் வளரவேண்டிய கல்வி நிலையங்களில் இன்று பகைமை உணர்வும், வெறுப்பும், பிரிவினையும் வளர்ந்து வருகின்றன என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இந்த இளையச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? நாம் எப்படிப்பட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நாம் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுளோம். பள்ளியில் வளரும் பகைதான் சிறிது சிறிதாக வளர்ந்தோங்கி பிற்காலத்தில் பெரிய அளவில் இந்தச் சமூகத்தை சிதைத்தழிக்கிறது. இன்றைய நம் சமூகத்தில் காரணமே இல்லாமல் பகைமை வளர்க்கப்படுகிறது. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலேயே பலர் வெறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில், முதலாவதாக, காரணமின்றி பகைப்போர் வலுவாகவும், வீணாக வெறுப்போர் பலராக உள்ளதாகவும் எடுத்துக்காட்டும் தாவீது அரசர் இரண்டாவதாக, அவர்கள் அனைவரும் நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்வதாகவும் எடுத்துரைக்கின்றார். மூன்றாவதாக, இப்படிப்பட்டச் சூழலில் தன்னைக் கைவிட்டுவிடாமல் இருக்கவும், தன்னைவிட்டு அகன்றுவிடாமல் இருக்கவும், தனக்குத் துணைசெய்ய விரைந்து வருமாறும் வேண்டுதல் செய்து இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். இங்கே, தன்னை வெறுப்போரும் பகைப்போரும் யார் என்பதை அவர் சுட்டிக்காட்டவில்லை. சவுல் அரசரை மனதில் வைத்துக்கொண்டுதான் இதைக் கூறினாரா அல்லது, தன்மீது படையெடுக்க விரும்பிய அந்நிய நாட்டு அரசர்களைப் பற்றி கூறினாரா என்பதும் தெரியவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாவீது மகன் அப்சலோம் அவருக்கு எதிராக வெகுண்டெழுந்து அவனது ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோது, காட்டிற்குத் தப்பிச்செல்ல வேண்டிய அகோர நிலைக்குத் தள்ளப்பட்டார் தாவீது அரசர். ஒருவேளை, இதனை மனதில் கொண்டு இவ்வாறு இறைவேண்டல் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவருக்கு எதிரிகள் பலர் இருந்துள்ளனர் என்பது மட்டும் நமக்கு நன்கு புலனாகிறது.
இதன் காரணமாகத்தான், “என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர். பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர். நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்; நானோ அவர்களுக்காக மன்றாடினேன். நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்; அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்” (காண்க திபா 109:1-5) என்று தனது எதிரிகளின் செயல்பாடுகள் பற்றி மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு திருப்பாடல்களிலும் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார் தாவீது. அதாவது, 'நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்' என்பதை இரண்டாவது முறையாகவும் கூறுகின்றார். அப்படியென்றால் சவுல் அரசரையும், தனது மகன் அப்சலோமையும் மனதில் கொண்டே இவ்வார்த்தைகளைக் கூறியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. இந்த இருவருக்குமே தாவீது செய்த நன்மைகளை நாம் நன்கு அறிவோம். குறிப்பாக இவ்விருவரும் தாவீது மீது பகையும் வெறுப்பும் கொண்டிருந்தபோதும், அவர்களை முழுமனதுடன் மன்னித்து ஏற்று அன்பு செய்தார் தாவீது. மேலும் என்னதான் எதிரிகளாக இருந்தாலும், சவுல் மன்னர் பெலிஸ்தியருக்கு எதிரான போரில் தோல்வியடைந்து தனது உயிரைத் தானே மாய்த்துக்கொண்டபோதும், தனது படைவீரர்களாலேயே அப்சலோம் கொல்லப்பட்ட போதும் தாவீது அரசர் மனம் உடைந்து அழுதார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த உலகில் நன்மை செய்ய விரும்புபவர்களையும், உண்மையோடும் இலட்சியத் தெளிவோடும் வாழ விரும்புபவர்களையும், குறிப்பாக சமுதாயத்திற்கு நல்லது செய்ய முன்வரும் அனைவரையும் காரணமின்றி வெறுக்கும். தொட்ட தொண்ணூறுக்கும் பகைக்கும். இதுதான் உலக இயல்பு. நமதாண்டவர் இயேசுவும், “என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர். வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள். ‘காரணமின்றி என்னை வெறுத்தார்கள்’ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று” (யோவா 15:23-25) என்று உரைக்கின்றார். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு விடயம் நமக்கு நன்றாகப் புலப்படுகின்றது. அதாவது, பாவம் செய்வோரும், தீமை செய்வோரும், நன்மை செய்யும் யாவரையும் கண்டும் வெறுக்கின்றனர் காரணமின்றியும் வெறுக்கின்றனர் என்பதுதான் அது.
“வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்” என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்” (எரே 11:19) என்று தனது எதிரிகளின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் இறைவாக்கினர் எரேமியா. யாருக்கு இவர் நன்மை செய்ய நினைத்தாரோ அல்லது நன்மை செய்தாரோ அவர்கள்தாம் எரேமியாவுக்குப் பகைவர்கள் ஆனார்கள். இவ்வாறே புனித பவுலடியாரும் தனது வாழ்வில் பல்வேறு எதிரிகளைச் சந்தித்தார். என்பதைப் பார்க்கின்றோம். போலித் திருத்தூதர்கள் பற்றி எடுத்துரைக்கும் பவுலடியார், நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள் (2 கொரி 11:23-24) என்று தனது துயரங்களைப் பட்டியலிடுகின்றார்.
ஆகவே, நாம் நன்மை செய்தாலும் தீமைதான் விளைகிறது என்று மனம் தளர்ந்துவிடாமல் எப்போதும் நன்மையே செய்வோம். ஒருவேளை நாம் செய்த நன்மைக்குப் பதிலாக தீமை நம்மைச் சூழ்ந்துகொள்ள நேரிட்டாலும், தாவீதைக் காத்தது போன்று நம்மையும் கடவுள் காப்பார் என்ற நம்பிக்கையுடன் நமது வாழ்க்கைப் பயணத்தைக் தொடர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்