மகிழ்ச்சி நிறை இந்திய சிறார் மகிழ்ச்சி நிறை இந்திய சிறார்   (©V.R.Murralinath - stock.adobe.com)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 39-3, எண்ணம்போல் வாழ்வு!

நிலைவாழ்வுக்குத் தடையாய் இருக்கும் நமது பாவங்களை ஆண்டவரிடம் பட்டியலிட்டு, மன்னிப்பு வேண்டி, அவ்வாழ்வை உரிமையாகிக்கொள்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘நீர்க்குமிழியாய் மானிடர் வாழ்வு!’  என்ற தலைப்பில் 39-வது திருப்பாடலில் 05, 06 ஆகிய இரண்டு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 07 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். இப்போது அவ்வார்த்தைகளைப் பக்தியுணர்வுடன் வாசிப்போம். என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கின்றேன். என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்; மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும். நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்; ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே. (வசனம் 07-09).

திருப்பாடல் 39-3, எண்ணம்போல் வாழ்வு!

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்ய சென்றபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில்  அங்கே புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளெமிங் அவனைக் காப்பாற்றினார். ஃப்ளெமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாகப் புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான். இச்சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தான் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.  மேலும், “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்” என்றார் அந்தப் பிரபு. “இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது மகன் அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு ஓடி வந்தான். அதைக் கண்ட அந்தப் பிரபு, “அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங். “அப்படியானால், நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். என் மகனுக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை உங்கள் மகனுக்கும் கொடுக்கிறேன். அவன் உங்களைப் போன்று நற்குணம் கொண்டவனாக வளர்ந்தால், பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக் கூடிய அளவுக்கு வருவான்” என்றார் பிரபு. ஃப்ளெமிங்கும் அதனைச் சரியென ஏற்றுக்கொண்டார். இப்படியாக, காலஓட்டத்தில் அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. அந்தப் பிரபு, தான் சொன்னதோடு மட்டுமல்ல; அதனை செய்தும் காண்பித்தார். விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். பிற்காலத்தில், இலண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்த *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார். ஆண்டுகள் பல கழிந்தபின் பிரபுவின் மகன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. அந்தப் பிரபுவின் பெயர்தான் Lord Randolph Churchil. அவரது மகன்தான். Sir Winston Churchill.

'தினை விதைத்தவன் தினை அறுப்பான்', 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்று நம் முன்னவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது இந்து சமயத்தில் இதனை 'கர்மா' அதாவது, ‘முற்பிறவியின் பயன்’ என்கிறார்கள். தற்போதைய நடைமுறை வாழ்வில், இதனை 'எண்ணம்போல் வாழ்வு' என்று சொல்கின்றனர். நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீயது செய்தால் தீயது நடக்கும் என்று இதனை நாம் சுருக்கமாகக் கூறலாம். நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இத்திருப்பாடலில், தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை கொடிய துன்பங்களுக்கும் அல்லது வாதைகளுக்கும் தான் முன்பு செய்த பாவமே காரணம் என்று ஆண்டவரிடம் கதறி அழுகிறார் தாவீது அரசர்.

இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட இறைவார்த்தைகளில், "என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார். ஏன், எதற்காக இந்தக் கேள்வியை எழுப்புகிறார் என்று நாம் ஆழமாகச் சிந்திக்கும்போது, அவரது பாவ வாழ்வுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பது நமக்குப் புலனாகிறது. அதாவது, உரியாவின் மனைவி பெத்சேபாவுடன் பாவத்தில் வீழ்ந்தது, அதன் விளைவாகத் தான் அளவற்ற துயரங்களைச் சந்தித்தது, தனது உறவுகளால் கைவிடப்பட்டது, தனது எதிரிகளால் எள்ளிநகையாடப்பட்டது என வேதனையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டார் தாவீது அரசர். இதனையெல்லாம் திரும்பத் திரும்ப சிந்தித்ததின் விளைவாக, இந்த உலக வாழ்வு பொருளற்றது, நிலையற்றது, ஒன்றுமில்லாதது, நீர்குமிழிப் போன்றது என்றும், ஆண்டவராம் கடவுள் மட்டுமே நிலையானவர், அவர் அளிக்கும் பேரின்ப வாழ்வே என்றும் நிலையானது என்றும் உணரத் தொடங்குகின்றார் தாவீது அரசர். ஆக, நிலையற்ற இவ்வுலக வாழ்வையும், நிலையான இறைவாழ்வையும் இருகண்கொண்டு நோக்கும் தாவீது அரசர், "என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்?" என்று கேள்வி எழுப்புவதாக நாம் உணர்ந்து கொள்ளலாம். அதேவேளையில், "என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்?" என்று கேள்வி எழுப்பினாலும், "நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்" என்று அவர் தொடர்ந்து கூறுவதன் வழியாக, இறைவன் தரும் அழியாத நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவே அவர் விரும்புகின்றார் என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

புன்னகை
புன்னகை

மேலும் இத்தகைய நிலைவாழ்வைப் பெறுவதற்குத் தனது பாவங்களும், மதிகேடு நிறைந்த தனது எதிரிகளும் தடையாய் இருப்பதால்தான், "என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்; மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும்" என்று தொடர்ந்து ஆண்டவராம் கடவுளிடம் வேண்டுதல் செய்கின்றார். இதன் காரணமாகவே,  “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்” என்றும், “இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை  நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்” என்றும், “என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்” (காண்க.திபா 51:4,6-7;9) என்றும் தாவீது கூறுவதன் வழியாக, இறைவன் அளிக்கும் நிலைவாழ்வுக்குத் தடையாய் இருப்பது பாவமே என்பதை எடுத்துக்காட்டி இறையருளால் அது கழுவிப் போக்கப்பட்டால் மட்டுமே நிலைவாழ்விற்குள் புக முடியும் என்பதை மிகவும் ஆழமாகவே உணர்ந்திருக்கின்றார் தாவீது அரசர் என்பதும் நமக்கு நன்கு புலனாகின்றது.

அடுத்ததாக, “மதிகேடரின் பழிப்புக்கு என்னை ஆளாக்காதேயும்” என்றும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர். பொதுவாக, ஒரு மனிதர் இறையச்சம் கொண்டவராய் நேரிய உள்ளமுடன் வாழ்கின்றார் என்றும், அவரது நேரிய செயலுக்காக மிகுந்த மரியாதைக்குரியவராக அவர் எல்லோராலும் போற்றப்படுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அத்தகைய நிலையில் அவருக்கு என்ன நிகழும்? அவரது நேரிய மனத்திற்காகவும் நற்செயல்களுக்காகவும் ஒருபுறம் அவர் போற்றப்பட்டாலும், மறுபுறம், இவன் எப்போது வீழ்வான், அவன்மீது நாம் வெற்றிகொள்ளலாம் என்றுதானே அவருடைய எதிரிகள் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பர். அப்படிப்பட்ட மனிதர் ஏதோவொரு சூழலில் பாவத்தில் வீழ்கிறார் என்ற நிலை வரும்போது, அவருடைய எதிரிகள்தானே முதலில் தங்களின் இழிவான பேச்சுக்களாலும், மேலும் மேலும் அவரை அழித்தொழிக்கத் தீட்டும் கொடிய திட்டங்களாலும் அதிக வாதைக்கும் மனவேதனைக்கும் அவரை உட்படுத்துவர்?  அதேவேளையில், ஆகா... ஓகோ... என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் கூட, அவரைப் புரிந்துகொள்ளாத நிலையில், ‘இவனைப் பற்றி எப்படியெல்லாமோ நினைத்தோம், ஆனால், இப்படி செய்துவிட்டானே! ச்சே.. இவனெல்லாம் ஒரு மனுசனா’ என்று கருதி அவரைத் தரம்தாழ்த்தி பேச நேரிடலாம். ஆக, இத்தகையதொரு கொடிய நிலை தாவீது அரசருக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், "மதிகேடரின் பழிப்புக்கு என்னை ஆளாக்காதேயும்" என்று ஆண்டவரிடம் உருக்கமாக இறைவேண்டல் செய்கிறார் தாவீது. என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த அவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர் என்றும், அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள் என்றும், தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள் (காண்க. திபா 22: 7-8, 13,16) என்றும் தனது எதிரிகளின் மூர்கத்தனங்களையும், கொடிய திட்டங்களையும் வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது. ஆகவே, தாவீதின் வழியில் நிலைவாழ்வுக்குத் தடையாய் இருக்கும் நமது பாவங்களை ஆண்டவரிடம் பட்டியலிட்டு, அவற்றிலிருந்து விடுதலைப் பெறவும், நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் அவரிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

ஒரு சிறிய செபத்துடன் இவ்வார விவிலியத் தேடல் சிந்தனைகளை நிறைவுக்கு கொணர்வோம். அன்பின் தெய்வமே, இந்நாளிலே எங்களையும் உமக்கு எதிராக நாங்கள் செய்த பாவங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். தாவீது அரசரின் குற்றங்களையும் பாவங்களையும் நீர் கனிவுடன் மன்னித்து அவரை ஏற்றுக்கொண்டதுபோல எங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும். எங்கள் பாவங்களால் எங்களை நீர் எங்களுடைய எதிரிகளின் கரங்களில் ஒப்படைத்துவிடாதேயும். நீர் அருளும் இரக்கமும் கொண்டவர் என்பதையும் சினம் கொள்ள தாமதிப்பவர் என்பதையும் நாம் அறிந்து உமது பரிவிரக்கத்திற்காகக்  காத்திருக்கின்றோம். எம்மை ஏற்று, ஆசீர்வதித்து, அரவணைத்து நீடித்த மகிழ்ச்சி தரும் உமது நிலைவாழ்வை நாங்கள் உரிமையாக்கிகொள்ளச் செய்தருளும் ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 13:28