நேர்காணல் - திருத்தூதர்கள் தூய பேதுரு பவுல் பெருவிழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையைத் திறம்பட வழிநடத்தி அதன் தலைவராக இருந்தவர் திருத்தூதர் பேதுரு. படிப்பறிவற்ற சாதாரண மீன்பிடித்தொழிலாளியான அவரின் எளிய மனமே அவரை திருஅவையின் முதல் தூணாக மாற்றியது. கிறிஸ்தவர்களைக் கொல்லவேண்டும் என்று துடித்த சவுல் பவுலாக மனமாற்றம் பெற்று அந்த கிறிஸ்தவத்திற்காகவே தன் உயிரை மாய்த்தவர் புனித பவுல். படித்து பட்டம் பெற்ற இவரின் மனமாற்றமே திருஅவையின் தூணாக இவரையும் மாற்றியது. இன்று நாம் விழாகொண்டாடும் இவ்விரு புனிதர்களும் ஒரே பின்னணியையோ குழுவையோச் சார்ந்தவர்களல்லர், ஒரே மொழி பேசுபவர்களோ, ஒரே மாதிரியாக சிந்திப்பவர்களோ அல்லர். ஆனால் இவர்கள் இணைந்து செயல்பட்டார்கள். அடிப்படைப்புரிந்துணர்வு, இலக்கில் தெளிவு, விட்டுக் கொடுத்தல் ஆகிய பண்புகளால், இணைந்து திருஅவைக்காக உழைத்தவர்கள். திருத்தூதர்களான தூய பேதுரு பவுல் பெருவிழாவினை திருஅவை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இப்பெருவிழா பற்றிய செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்பவர் அருள்பணி சைமன் பீட்டர். கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளராக 1991ஆம் ஆண்டு அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், வரலாறு, இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆலயம், சரணாலயம், பரிசுத்தரே அன்னைக்கோர் அஞ்சலி என்பன இவர் வெளியிட்ட சிறப்பு பாடல் தொகுப்புக்களாகும். தற்போது சின்ன தாராபுரம் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்பணி சைமன் பீட்டர் அவர்கள், விவிலிய முழக்கம் என்னும் அன்றாட நற்செய்தி பகிர்வு, ஞான வானொலி என்னும் இணைய வானொலி சேவை, ஞான ஒலி இணைய வார இதழ் ஆகிய பணிகளையும் திறம்படச் செய்து வருகின்றார். தந்தை அவர்களை திருத்தூதர் பேதுரு பவுல் பெருவிழா பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்