மூவொரு கடவுள் மூவொரு கடவுள்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

மூவொரு கடவுள் பெருவிழா : ஒன்றிப்பின் இறைவன்!

மூவொரு இறைவனிடம் விளங்கும் சமத்துவமும் ஒன்றிப்பும் நமது குடும்பங்களிலும், பங்குத்தளங்களிலும், பணித்தளங்களிலும், திருஅவையிலும் விளங்கிட வேண்டும்.
மூவொரு கடவுள் பெருவிழா : ஒன்றிப்பின் இறைவன்

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I.   விப  34: 4b-6, 8-9     II.  2 கொரி 13: 11-13     III.  யோவா 3: 16-18)

நமது அன்னையாம் திருஅவை தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவை இன்று கொண்டாடி மகிழ்கின்றது. நமது வாழ்வில் நாம் தொடங்கும் எந்தயொரு செயலையும் தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - என்று தொடங்கி, அதனையே திரும்பவும் கூறி முடிக்கின்றோம். நமக்கு விவரம் தெரிந்த உடனேயே அர்ச்சிஸ்ட்ட சிலுவை, அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுரா பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே-ஆமென் என்றுதான் நமது பெற்றோர் நமக்கு முதலில் கற்பிக்கின்றனர். நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கின்ற திருப்பலியையும், ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே!’ என்றுதான் அருள்பணியாளர் தொடங்குகின்றார். அதன்பிறகு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! என்று கூறி இறைமக்களை வாழ்த்துகின்றார். இப்படித்தான் புனித பவுலடியாரும் கொரிந்து நகர மக்களை மூவொரு கடவுளின் பெயரால் வாழ்த்துகின்றார் (காண்க 2 கொரி 13:13). அதிலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தச் செபம். அவ்வாறே, திருப்பலியின் முடிவிலும், ‘எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக!’ என்று கூறித் திருப்பலிக் கொண்டாட்டத்தை நிறைவு செய்கின்றார் அருள்பணியாளர். ஆக, நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த மூவொரு இறைவனின் உறவிலிருந்து நாம் பிரிக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றோம். மேலும் மூவொரு இறைவன் குறித்து நாம் கேள்விக் கேட்காதவரை நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், ‘ஒரே கடவுள், எப்படி மூன்று ஆள்கள்’ என்று கேள்வி எழுப்பும்போதுதான் நமக்குள் சிக்கல் பிறக்கின்றது. இதற்குப் பலவழிகளில் விளக்கம் கூற முற்பட்டு வருகிறோம், இருப்பினும் இதுவொரு மறைபொருளாகவே இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. ஒரே கடவுள் ஆனால், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறை உண்மையைத்தான், மூவொரு கடவுள் என்று நாம் கொண்டாடுகிறோம். இது புரிவதற்குச் சற்று கடினமான ஒன்றுதான். தந்தை கடவுளா என்றால், ஆம், கடவுள் என்கிறோம். மகன் இயேசுவைக் கடவுளா என்றால் ஆம் என்கிறோம். தூய ஆவியார் கடவுளா என்றால், ஆம் என்கிறோம். ஆனால், மூன்று கடவுளா? என்றால், இல்லை, ஒரே கடவுள் என்கின்றோம். ஏனென்றால், மூன்று பேருமே யாதொரு வேறுபாடும் இல்லாமல், ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே திருவுளத்தைக் கொண்டுள்ளனர். இது குழப்பமான ஒன்றுதான், ஆனாலும், இந்தக் குழப்பத்திற்கு நம்மால் விடை காணவே முடியாதா?  என்ற கேள்வியும் எழுகிறது, பொதுவாக, இந்த மூவொரு கடவுளைப் புரிந்துகொள்ள, நமக்குக் கொடுக்கப்படுகிற விளக்கம் தண்ணீர். தண்ணீர் எப்படி திடமாக, திரவமாக, ஆவியாக மூன்று நிலைகளைப் பெறுகிறதோ, அதேபோல், ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்று, விளக்கம் கூறுகின்றனர்.

உலகில் நிகழும் பலவற்றை மனிதர்கள் இன்னும் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதே உண்மை. பெர்முடா முக்கோணம் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இது வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி, அங்கே நிறைய வானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு மனிதருக்கு அப்பாற்பட்ட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாகவே பொதுமக்கள் இன்றுவரை நம்புகின்றனர். இதனைப் பார்க்கும்போது, மனிதரின் அறிவுக்கு எல்லாமே எட்டிவிடுவதில்லை என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மனிதரின் அறிவுக்கு எட்டாத பலவிடயங்களை உள்ளன என்பதும் புலனாகிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் கடவுளின் படைப்பில் நிகழும் சில அதிசயங்களையே இன்னும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அப்படைப்பின் காரணகர்த்தாவாகிய கடவுளைப் பற்றி நம்மால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்? மனித வாழ்வில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று முக்கிய கேள்விகள் அவரை ஆட்டிப்படைகின்றன. இந்த மூன்றிலும் ‘ஏன், எதற்கு’, என்ற இரண்டிற்கும் விடை கிடைத்தபோதிலும், ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் தேடுவது பெரும் சிரமம்தான்.

மூவொரு இறைவனின் பெருவிழா கொண்டாப்படும்போதெல்லாம் இறையியல் மேதையான புனித அகுஸ்தினாருக்கும், குழந்தை வடிவில் அவரைச் சந்தித்த வானதூதருக்கும் கடற்கரையில் நிகழ்ந்த சந்திப்பைப் பற்றிய கதை நமக்கு நினைவில் இருக்கும். எல்லைகளற்ற இறைவனை, தன் சிறு அறிவுக்குள் அடக்கிவிட, புனித அகுஸ்தினார் மேற்கொண்ட முயற்சி, கடல் நீர் முழுவதையும், கரையில் தோண்டப்பட்ட ஒரு சிறு குழிக்குள் ஊற்றிவிடும் முயற்சி என்பதை, குழந்தை வடிவில் வந்த வானதூதர் அவருக்கு உணர்த்திச் சென்றார் என்ற இக்கதையிலும், பணிவுப் பாடங்கள் உணர்த்தப்பட்டுள்ளன. அன்று, அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினாரை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப் பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. எப்படி என்ற கேள்வியை விடுத்து, எதற்காக இறைவன் மூவொரு இறைவனாகவும் ஒரே இறைவனாகவும் இருக்கின்றார் என்பதை ஆழமாக உணர்ந்து அறிந்திருந்தபடியால்தான், "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று புனித அகுஸ்தினார் பின்னொரு காலத்தில் சொன்னார். ஆக, மூவொரு இறைவனை அறிதல் என்பது நம் மனித அறிவுக்கு எட்டாதது என்பதை இந்நிகழ்வு நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இரக்கத்தின் மூவொரு இறைவன்

மூவொரு இறைவன் இரக்கத்தின் இறைவனாக இருக்கின்றார் என்பதைப் பார்க்கின்றோம். பாவத்தில் உழன்றுபோயிருந்த இவ்வுலகை மீட்கும் செயலில் மூவொரு இறைவனும் ஈடுபட்டதாக இயேசு சபையின் நிறுவுனர் புனித இனிகோ தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் தொடக்கத்திலேயே குறிப்பிடுகின்றார். ஆக, மூவொரு இறைவன் இவ்வுலகை மீட்க விரும்பும்போது, தன்னிலிருந்து தனது மகனாக இயேசுவை அனுப்புகிறார். தனது இரத்தத்தால் இவ்வுலகை மீட்ட இயேசுவைத் தொடர்ந்து தந்தையிடமிருந்து புறப்பட்டு வருபவர்தான் துணையாளாராம் தூய ஆவியார். ஆதிப்பெற்றோரிடம் தொடங்கிய இறைத்தந்தையின் இரக்கம் இயேசுவில் உச்சம் தொட்டு, ஆவியாரில் நிறைவடைகிறது. ஆகவே, மீட்பின் வரலாற்றில் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மானிடர் அவருக்கு எதிராக எத்தனை முறை பாவங்கள் புரிந்தாலும் அத்தனைமுறையும் அவர் தனது பேரிரக்கத்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. மூவொரு இறைவன் தன்னிலேயே இரக்கமும் கனிவும் உடையவர் என்பதை தன் வாயாலேயே உரைக்கின்றார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். ஆண்டவர்! ஆண்டவர்!; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்." சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளைகளைப் பெற்றுவரத் தாமதம் செய்ததால், இஸ்ரயேல் மக்கள் பொற்கன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு தான் பத்து கட்டளைகள் அடங்கிய அப்பலகைகளை உடைத்துப்போட்டார். ஆனாலும் அவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டதால் அவர் அம்மக்களை மன்னித்து தான் கனிவும் இரக்கமும் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றார். மேலும் உடைந்துபோன பத்து கட்டளைகளைக் கொண்ட கற்பலகைகளுக்குப் பதிலாக புதியதொன்றையும் மோசேயிடம் கொடுத்தார் (காண்க. விப 34:4,29). இதனைத்தான், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" என்று தந்தையின் தியாகமிக்க அன்பை எடுத்துக்காட்டுகிறார் இயேசு (காண்க. யோவா 3:16).

மூவொரு இறைவனின் உடனிருப்பு

இவ்வுலகை மீட்கும் செயலில் இயேசு மட்டும் தனியாக இல்லை என்பதை திருவிவிலியத்தில் காண்கின்றோம். இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கியவேளை யோர்தான் ஆற்றில் அவர் திருமுழுக்குப் பெற்றபோது (காண்க. மத் 3:16-17) மூவொரு இறைவனின் பிரசன்னத்தைக் காண்கின்றோம். அவ்வாறே, இயேசு, கல்வாரியில் தனது இன்னுயிரைக் கையளிப்பதற்கு முன்பு தாபோர் மலையில் நிகழ்ந்த உருமாற்றத்தின்போதும் (காண்க. மாற் 9:7) மூவொரு இறைவனின் பிரசன்னத்தைப் பார்க்கின்றோம். மேலும், யோவான் நற்செய்தியில் தன்னைப் பற்றியும், தன் தந்தையைப் பற்றியும், துணையாளராம் தூய ஆவியார் பற்றியும் மிக மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன். நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் (காண்க. யோவா 14:13-16).

மேலும் தனது உயிர்ப்பின் வல்லமையையும் உயிராற்றலையும் பெற்றுக்கொண்ட சீடர்களுக்கு மீண்டும் மூவொரு இறைவன் பற்றி நமதாண்டவர் இயேசு தெளிவுபடுத்துகின்றார். சிறப்பாக, விண்ணேற்றத்திற்கு முன்பாக கலிலேயாவிலுள்ள மலையொன்றில் தனது நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இறையாட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கும் சீடர்கள் குழுமத்திடம், “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (காண்க. மத் 28::18-20)

மூவொரு இறைவன் காட்டும் சமத்துவமும் ஒன்றிப்பும்

மூவொரு கடவுள் காட்டும் சமத்துவமும் ஒன்றிப்பும்
மூவொரு கடவுள் காட்டும் சமத்துவமும் ஒன்றிப்பும்

இறுதியாக, இந்த மூவொரு இறைவன் பெருவிழா நமக்குத் தரும் பாடங்கள், நாம் ஒருவர் ஒருவரோடும், திருஅவையோடும், இதன் வழியாக என்றுமுள்ள இறைவனோடும் எப்போதும் ஒன்றித்திருக்க வேண்டும் என்பதே. இதன் அடிப்படையில்தான், “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!” என்று இறைத்தந்தையிடம் வேண்டுதல் செய்கின்றார் இயேசு (காண்க.யோவா 17:21). இம்மூவரில் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே, மூவொரு இறைவனின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தும்போதெல்லாம் முக்கோண வடிவத்தை எடுத்துக்காட்டுகிறோம். காரணம், இவற்றிலுள்ள மூன்று கோடுகளும் சிறிதும் பெரிதுமாக இல்லாமல் சரி சமமாக ஒரே அளவுடையாதாக இருக்கும். இதனைத்தான், ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே திருவுளம் என்கின்றோம். ஆக, மூவொரு இறைவனிடம் விளங்கும் இந்தச் சமத்துவமும் ஒன்றிப்பும் நமது குடும்பங்களிலும், பங்குத்தளங்களிலும், பணித்தளங்களிலும், திருஅவையிலும் விளங்கிட வேண்டும்.

திரித்துவத்தின் புனித எலிசபெத் (1880-1906) மூவொரு கடவுளை “திரித்துவம்” அல்லது “என் திரித்துவம்” எனக் குறிப்பிட்டார். அவரது முழு ஆன்மிகமும் தனது இதயத்தை மூவொரு கடவுளுக்கு ஒரு இல்லமாக்குவதாகவே இருந்தது. கடவுள் நமது இதயத்தின் ஆழத்திலும் ஆன்மாவிலும் வாழ்கிறார் என்பதையும் அவர் நம்மை தனியாக விட்டுவிடமாட்டார் என்பதுடன் நமது வாழ்விலிருந்து யாரும் அவரை எடுத்துவிட முடியாது என்பதையும் அவர் இன்று நமக்கு  நினைவூட்டுகிறார். ஆகவே, மூவொரு கடவுள் தன்னிலேயே ஒன்றிப்பின் கடவுளாக இருப்பதுபோல, நாமும் நம்மிலும் மூவொரு கடவுளிலும் ஒன்றித்திருப்போம். எப்போதும் ஒன்றித்து வாழ்வதே கிறித்தவ வாழ்வின் அடையாளம் என்பதையும் உணர்ந்துகொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2023, 12:50