தடம் தந்த தகைமை - வேற்றினத்து அரசன் அவையில் தானியேல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளவேண்டும். அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.
அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார். தானியேல், அனனியா, மிசாவேல் அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது: “ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும். அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்” என்றார்.
அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப்பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது. ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.
கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான். அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்