தடம் தந்த தகைமை - மன்னரையும் ஆமானையும் விருந்துக்கு அழைத்தல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
எஸ்தர், அரசியின் ஆடையணிந்து அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார். அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில், அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார். உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும் மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது. மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார். மன்னர் அவரை நோக்கி, “எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோள் யாது? என் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்” என்றார்.
அதற்கு எஸ்தர், “மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தரவேண்டும்” என்று பதிலளித்தார். எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார்; அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர். விருந்தில் திராட்சை மது அருந்துகையில், மன்னர் எஸ்தரை நோக்கி, “உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்; அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றார். அதற்கு எஸ்தர், “என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே: மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால், மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும் உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன்” என்று பதிலளித்தாள்.
அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான். ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது. எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான். ஆமான் அவர்களிடம் தன் செல்வச் சிறப்பைப் பற்றியும் தன் மைந்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், மன்னர் தன்னை எவ்வாறு அனைத்துத் தலைவர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் மேலாய் உயர்த்தியுள்ளார் என்பதைப் பற்றியும் விரித்துரைத்தான். மேலும் அவன், “அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத் தன்னையன்றி வேறேவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல், நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள். எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை” எனவும் கூறினான்.
இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி, “ஐம்பது முழ உயரத் தூக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி, மொர்தக்காயை அதில் தூக்கிலிட்டப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்!” என்றனர். இவ்வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்