தடம் தந்த தகைமை - சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர். அவர்களுள் ஒருத்தி, “என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான். அவள் நள்ளிரவில் எழுந்து, உம் பணிப்பெண்ணாகிய நான் தூங்கிக் கொண்டிருக்கையில், என்னருகில் கிடந்த என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள். விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன்” என்றாள். இதைக் கேட்ட மற்றவளோ, “இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை” என்றாள். முதல் பெண்ணோ, “இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது” என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.
அப்பொழுது அரசர், “என்ன இது? ஒருத்தி, ‘உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்’ என்கிறாள். மற்றவளோ ‘இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்’ என்கிறாள்” என்றார். பின்னர் அரசர், “ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர். பிறகு அரசர், “உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள்” என்றார். உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், “வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று வேண்டினாள். மற்றவளோ, “அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்” என்றாள். உடனே அரசர், “உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய்” என்று முடிவு கூறினார். அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கெனக் கடவுள் அருளிய ஞானம் அவரிடம் உள்ளது என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்