இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய தலைவர்களும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய தலைவர்களும்   (ANSA)

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குங்கள்

கத்தோலிக்க அவை : பூர்வீகக்குடிமக்களின் நலவாழ்வை மனதில் கொண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டும் இலத்தீன் அமெரிக்காவில் நல்மாற்றங்கள் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மக்களை மையமாகக் கொண்ட நீடித்த, நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய தலைவர்களும் உதவ வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் இலத்தீன் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவின் கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவைகள்.

ஜூலை மாதம் 17, மற்றும் 18 தேதிகளில் பெல்ஜியத்தின் Brusselsல் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அவைக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்திற்கு கத்தோலிக்க அவைகள் ஒன்றிணைந்து அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விண்ணப்பம் விடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவைகளின் கூற்றுப்படி, இலத்தீன் அமெரிக்க நாடுகளில், உற்பத்தி, வியாபார உக்திகள், நுகர்வுக் கலாச்சாரம் போன்றவைகளில் குறிப்பிடத்தக்க நல்மாற்றங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் வாழும் ஆப்ரிக்க தலைமுறையினர், பூர்வீகக்குடிமக்கள் ஆகியோரின் நலவாழ்வை மனதில் கொண்டும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டும் மாற்றங்கள் தேவை என்கிறது இவ்வொன்றிணைந்த கத்தோலிக்க அவை.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல், உலக அமைதி மற்றும் நிலையானதன்மை, பொருளாதார மீட்பு, வியாபாரமும் முதலீடும், ஆய்வும் புதிய கண்டுபிடிப்புகளும், நாடுகளிடையே ஒத்துழைப்பு, குடிமக்களுக்கு நீதியும் பாதுகாப்பும் என பல்வேறு துறைகளை முன்னிறுத்தி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன இந்த நீதி மற்றும் அமைதி அவைகள்.

ஐரோப்பிய நாடுகள் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் கச்சாப் பொருள்களை எடுத்துச்செல்ல விரும்புவதால், சுரங்கத்தொழில் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற கவலையையும் வெளியிடும் இந்த கத்தோலிக்க அவைகள், இத்தகைய நடவடிக்கைகளும், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லையெனில் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 14:54