போர்த்துக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் உலக இளைஞர்களை வரவேற்க முதியவர்கள் தயாராகி வருகின்றனர் என்றும், அங்கு நிகழவிருக்கும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான மிக அழகான சந்திப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் João Chagas.
ஜூலை 25, இச்செவ்வாயன்று, வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய உரையாடலில் இவ்வாறு கூறிய பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத் துறையின் இளையோர் அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் Chagas அவர்கள், ஐரோப்பிய நாட்டில் தாங்கள் பெறவிருக்கும் மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும் அந்நாட்டின் முதியவர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதிலுமிருந்து வரும் இளைஞர்களை வரவேற்க பங்குத்தளங்கள் மற்றும் தலத்திருஅவைகள் தங்களைச் சிறப்பாகத் தயாரிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் உரைத்துள்ள அருள்பணியாளர் Chagas அவர்கள், இக்கொண்டாட்டங்களில் பங்குபெறவிருக்கும் அனைவரின் விவரங்களையும் தயார் செய்து வருவதுடன், பங்குத்தளங்கள் அனைத்தும் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன என்றும், வயதானவர்கள் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றும் விவரித்துள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் மற்ற இளைஞர்களைச் சந்திக்க இந்நாட்டு இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், ஆசையுடனும் இருப்பதை தான் காண்பதாகக் கூறியுள்ள அருள்பணியாளர் Chagas அவர்கள், லிஸ்பன் நகரம் ஏற்கனவே தன்னார்வலர்களால் நிரம்பியுள்ளது என்றும், தெரிவித்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களின் அழைப்பையேற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆகஸ்ட் மாதம் லிஸ்பன் மற்றும் பாத்திமாவுக்குச் செல்கிறார். ஆகஸ்ட் 2 முதல் 6 வரை லிஸ்பனில் தங்கும் திருத்தந்தை, ஆகஸ்ட் 5-ஆம் தேதி பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் சிறப்பு பயணம் மேற்கொள்வார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்