சூடான் நாட்டு புலம்பெயர்ந்தோர் சூடான் நாட்டு புலம்பெயர்ந்தோர்  

சட்டவிரோத குடியேற்ற மசோதா புலம்பெயர்த்தோருக்கு எதிரானது

இங்கிலாந்திற்குப் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் தேடிவரும் புலம்பெயர்ந்தோருக்கு இந்தச் சட்டவிரோத குடியேற்ற மசோதாவானது அதை மறுக்கச் செய்கிறது : Sarah Teather

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சட்டவிரோதக் குடியேற்ற மசோதாவை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றி இருப்பது பெரும் அச்சத்திற்குரியது என்று கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு.

இந்த மசோதா புகலிடம் கோருவதற்கான தடையை எதிரொலிக்கிறது என்றும், இது புலம்பெயர்ந்தோர் உடன்படிக்கைக்கு முரணானது மற்றும் கொடூரமானது என்றும் கூறியுள்ள அவ்வமைப்பு, இம்மசோதா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பெரிய அளவில் சிறைப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது என்றும், இது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை முடக்கி வைக்கும் ஆபத்தைக் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இது நவீன அடிமைத்தனத்தில் தப்பிப்பிழைப்பவர்களின் பாதுகாப்பை அகற்றி, கடத்தல்காரர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பேராபத்து உள்ளது என்று தெரிவிக்கும் அவ்வமைப்பு,  இம்மசோதா ஆய்வின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படாமல் அசுர வேகத்தில் பாராளுமன்றம் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தனது வருத்தத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள இங்கிலாந்து நாட்டிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இயக்குநர் Sarah Teather அவர்கள், இந்தச் சட்டவிரோதக் குடியேற்ற மசோதா, உலக அரங்கில் இங்கிலாந்தின் தார்மீகத் தலைமையின் எந்த உணர்வையும் வெறுப்பின் குழிக்குள் தள்ளகிறது என்று கூறியுள்ளார்.

குடியேற்ற அமைப்பில் குழந்தைகளை மொத்தமாகச் சிறையில் அடைக்க பாராளுமன்றம் முடிவு செய்திருப்பது குறித்து தான் அச்சமடைந்துள்ளதாகக் கூறியுள்ள Teather அவர்கள், இந்த இழிவான சட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், இதனை முறியடிக்கும் விதமாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுப்போம் என்றும் உரைத்துள்ளார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2023, 13:22