முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa. முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa.  (AFP or licensors)

இஸ்ராயேலின் அநீதி நடவடிக்கைக் குறித்து முதுபெரும்தந்தை.

அரசின் இராணுவத் தாக்குதல் ஓர் இடைக்காலத் தீர்வையே வழங்கும், மக்களின் மாண்பு, சுயாட்சி, சுதந்திரம் போன்றவைகளுக்கான நிரந்தரத் தீர்வுகள் காணப்பட வாய்ப்பில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களின் தனி நாடு குறித்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லையெனில் மக்களின் மரணங்கள் தொடர்வது நிறுத்தப்பட முடியாததாகிவிடும் எனக் கவலையை வெளியிட்டுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa.

பாலஸ்தீனிய எதிர்ப்புக் குரலை அடக்கும்விதமாக  வடக்கு சமாரியா பகுதியிலுள்ள Jenin அகதிகள் முகாம் மீது இஸ்ராயேல் அரசு இராணுவத் தாக்குதலை நடத்தியது குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார் பேராயர் Pizzaballa.

அரசின் இராணுவத் தாக்குதல் ஓர் இடைக்காலத் தீர்வையே வழங்கும், மக்களின் மாண்பு, சுயாட்சி, சுதந்திரம் போன்றவைகளுக்கான நிரந்தரத் தீர்வுகள் காணப்படும்வரை அநீதியான மரணங்கள் தொடர்வது தடுக்க முடியாததாகிவிடும் என்றார் முதுபெரும் தந்தை பிட்ஸாபாலா.

ஜெனின் நகரில் இஸ்ராயேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டது, மதவழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டது ஆகியவைக் குறித்து கண்டனத்தை வெளியிட்ட முதுபெரும்தந்தை, அப்பகுதியில் அநியாயக் குற்றங்கள் நிறுத்தப்பட்டு, உடனடி போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.

West Bankன் வடபகுதியிலுள்ள ஜெனின் அகதி முகாமை இஸ்ராயேல் இராணுவம் தாக்கியதிலிருந்து ஏறக்குறைய மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இத்தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2023, 14:40