தன் பாவங்களுக்காக மனம் வருந்தும் தாவீது தன் பாவங்களுக்காக மனம் வருந்தும் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-4: துன்பத்தில் தூயவரைத் தேடுவோம்

துன்பவேளை, அலகையின் மாயவலையில் சிக்கிக்கொள்ளாமல், அருளும் இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-4: துன்பத்தில் தூயவரைத் தேடுவோம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு கட்டுமான பொறியாளர் 13-வது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார். ஒரு  முக்கியமான வேலை. கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். அலைபேசியில் கொத்தனாரைக் கூப்பிட்டார் பொறியாளர். ஆனால், கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்டிருந்தார். அலைபேசியை எடுக்கவில்லை. பொறியாளரும் எவ்வளவோ உரக்கக் கத்திப் பார்த்தார். அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை. இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்திலிருந்து அவரால் பொறியாளரை நன்றாகப் பார்க்க முடியும். பொறியாளர் என்ன செய்வதென்று யோசித்தார். உடனே ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார். ரூபாயைப் பார்த்த கொத்தனார் அதை எடுத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.  ஆனால், சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை. பொறியாளருக்கு ஒரே கோபம். இருந்தாலும் பொறுத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார் அந்தப் பொறியாளர்  அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்ட கொத்தனார் சித்தாளுடன் பேசுவதில் மும்முரமாக இருந்தார். இதனால் பொறுமை இழந்த பொறியாளர் ஒரு சின்ன கல்லை எடுத்து கொத்தனார் மீது போட்டார். அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியை ஏற்படுத்த உடனே கொத்தனார் மேலே பார்த்தார். அப்பொழுதுதான் பொறியாளர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார். மனிதனும் அப்படித்தான். மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்குப் புரிவதில்லை. உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான். இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றார். அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால், ஒரு துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான் மனிதன். துன்பங்கள் வரும் நேரம் இறைவன் நம்மைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'இறைநீதியை அறிவிப்போம்!' என்ற தலைப்பில் 40-ஆவது திருப்பாடலில் 09 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 12 முதல் 15 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஏனெனில், எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்! என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்! (வசனம் 12-15)

நாம் தியானிக்கும் மேற்கண்ட இறைவார்த்தைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, தனக்கு நேரிட்ட தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் தாவீது அரசர், இரண்டாவதாக, இந்தத் தீமைகளை விளைவிக்கும் தனது எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார்.

01. எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன

முதலாவதாக, “எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன” என்கின்றார் தாவீது அரசர். எதனை மனதில் வைத்துக்கொண்டு இப்படி கூறுகின்றார் என்று தெரியவில்லை. ஒருவேளை, சவுல் அரசர் அவருக்கு விளைவித்த கேடுகளை நினைத்துக்கொண்டு இப்படி கூறியிருக்கலாம். அல்லது, தனது மகன் அப்சலோம் தனது ஆதரவாளர்களுடன் அவருக்கு எதிராக வெகுண்டெழுந்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோது ஏற்பட்ட தீமைகள் குறித்துக் கூட கூறியிருக்கலாம். அல்லது, மற்ற அவருடைய எதிரிகள் அவருக்கு இளைத்த தீமைகளை மனதில் கொண்டு கூட இருக்கலாம். அதேவேளை, உரியாவின் மனைவி பத்சேபாவுடன் புரிந்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட தீமைகளால் கூட இதனைக் கூறி இருக்கலாம். எது எப்படி இருப்பினும், தாவீது தீமையின் பிடியில் சிக்குண்டு தவிப்பதை நம்மால் அறியமுடிகிறது அதனால்தான். "தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்" (திபா 22:16) என்று, தனது எதிரிகள் தன்னை சுற்றிவளைத்துககொண்டு தனக்கு எவ்வாறெல்லாம் தீமை விளைவித்தார்கள் என்பதை 22-வது திருப்பாடல் முழுவதுமே எடுத்துக்காட்டுகின்றார் தாவீது.

02. பார்வையை மறைக்கும் குற்றங்கள்

இரண்டாவதாக, "என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன" என்கின்றார் தாவீது அரசர். அப்படியென்றால், பத்சேபாவுடன் அவர் புரிந்த பாவத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றார் தாவீது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இறைவாக்கினர் நாத்தான் தாவீதிடம் வந்து அவருடைய பாவத்தை எடுத்துரைத்தபோது, “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” (காண்க 2 சாமு 12:13) என்கின்றார். மேலும் தனது பாவங்களுக்காக வருந்தி அழும் தாவீது, “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத்  தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்” (காண்க திபா 51: 1-4) என்று கடவுளிடம் கதறி அழுகின்றார்.

03. தலைமுடிகளைவிட மிகுதியான குற்றங்கள்

மூன்றாவதாக, "எனது குற்றங்கள் என் தலைமுடிகளைவிட மிகுதியானவை" என்கின்றார் தாவீது. ஏன் அவர் இவ்வாறு கூறுகின்றார் என்பதை நாம் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். நம் தலையிலுள்ள முடிகளை கண்டிப்பாக நம்மால் எண்ணிவிட முடியாது. காரணம், அது மிகவும் கடினம் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் தான் செய்த பாவமும் அந்தளவுக்கு அதாவது, தலைமுடிகளைவிட எண்ணிக்கையில் அதிகம் என்பதை எடுத்துக்காட்டவே இவ்வாறு கூறுகின்றார் தாவீது. அதனால்தான், “நான் தடுமாறிவிழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன். என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்” (காண்க திபா 37:18-18) என்று கூறுகின்றார்.

04. உள்ளத்தைத் தளரச் செய்யும் பாவம்

நான்காவதாக, "என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது" என்கின்றார் தாவீது. பொதுவாக, பாவத்தின் விளிம்பில் வாடும் அல்லது துயருறும் மனிதரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளாகவே இவை அமைகின்றன.  நான் செய்த பாவத்தால் நான் மிகவும் மனம் நொந்த நிலையில் இருக்கின்றேன். எனது மனதெல்லாம் தளர்ந்துபோய்விட்டது, நான் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலைகுத் தள்ளப்பட்டுள்ளேன். என்மீது எனக்கே வெறுப்பாக இருக்கின்றது. ஏன் வாழ்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் வாழ்வதால் யாருக்கு என்ன பயன்? பேசாமல் போய்ச்சேர்வதே நல்லது என்று கூறி பலர் காற்றிலாடும் நாணலைப் போன்று அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்துபோவதைக் கண்டிருக்கின்றோம். தாவீது கூறும் வார்த்தைகளால், இத்தகையதொரு கொடிய நிலைக்குத் தாவீது அரசர் தள்ளப்பட்டுள்ளதை நம்மால் அறியமுடிகிறது. இதன் காரணமாகவே, “என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர் (காண்க திபா 32:5) என்கின்றார் தாவீது.

தாவீதின் இறைநம்பிக்கை

நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளின் இரண்டாம் பகுதியாக அமைவது தாவீது அரசரின் இறைநம்பிக்கை. தன் பாவத்தின் தன்மை குறித்து தாவீது உள்ளம் தளர்ந்த நிலையில் இருந்தாலும், பாவத்தின் காரணரான சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளவில்லை, மாறாக, தன் பாவங்களால் இறைவன் தன்னைக் கைவிடமாட்டார் என்றும், தன்னை அவர் எப்படியும் காப்பாற்றுவார் என்றும் எண்ணுகிறார். மேலும் தனது நம்பிக்கை முழுவதையும் இறைவனில் நிலைநிறுத்தியவராக, "ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்" என்று அவரைக் கூவியழைக்கின்றார் தாவீது. மேலும், “ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!  நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!” (காண்க திபா 102:1-2) என்றும் உரைக்கின்றார். அதேவேளையில், தனது வீழ்ச்சிக்காகவே காத்திருந்த எதிரிகள் அனைவரும் அவமானப்பட்டு தோற்றுப்போய் புகையென மறைவர் என்பதை மனதில் இருத்தியவராக, “என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்! என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!” என்கின்றார் தாவீது.

ஆகவே, நமது பலவீனங்களாலும் பாவங்களாலும் நாம் துயருறும் வேளையில், மனம் நொந்து, இறைநம்பிக்கை இழந்து அலகையின் மாயவலையில் சிக்கிக்கொள்ளாமல், அருளும், இரக்கமும், மன்னிப்பும் வழங்கும் இறைவனை நோக்கிக் குரலெழுப்பி மன்றாடுவோம். கனிவும், பரிவிரக்கமும். மனத்தாழ்மையும் கொண்ட இறைவன் உறுதியாக நம்மையும் மன்னித்து ஏற்பார். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 10:08