கலந்துரையாடலில் பங்குபெற்றோர் கலந்துரையாடலில் பங்குபெற்றோர்  

செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தால் ஏற்படும் சவால்கள்!

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) தாக்கத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய வலுவான கடமையைக் கொண்டுள்ளன : பேராசிரியர் Marco Carlo Passarotti.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதர்கள்  எப்போதுமே புள்ளிவிபரங்களைப் பயன்படுத்துகிறார்கள், என்றாலும் அவர்கள் விரல் நுனியில் இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளையும், மிகப்பெரும் செயலாக்கத்தின் தரத்தையும் பெற்றதில்லை என்று கூறியுள்ளார் மிலான் நகர் திருஇருதயக் கல்லூரியின் பேராசிரியர் Marco Carlo Passarotti.

SACRU என்ற அனைத்துலக வலைதள அமைப்பானது இத்தாலிய நகரமான மிலானில் உள்ள திருஇருதயக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் அறிவியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள வேளை இவ்வாறு தெரிவித்துள்ளார் பேராசிரியர் Passarotti.

இந்தக் கணக்கீட்டு முன்னேற்றம் (computational breakthrough) என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டத் தரவுகளுக்கு இடையேயான தொடர்புகளை அவர்களின் விரல்நுனியில் வைக்கிறது என்றும், இது பணியாளர்களின் வேலையை மிகவும் எளிமையாக்குகிறது என்றும் உரைத்துள்ளார் பேராசிரியர் Passarotti.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) தாக்கத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய வலுவான கடமையைக் கொண்டுள்ளன என்று எடுத்துரைத்துள்ள பேராசிரியர் Passarotti அவர்கள், இது மனிதர்கள் இயந்திரங்கள் மீது கொள்ளும் நம்பிக்கையை தவிர்த்து,  மனித மாண்பை மதிக்கத் தயாராக இருக்கும் அணுகுமுறையை நோக்கிய வளர்ச்சி என்றும் தெரிவித்தார்.

சிலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், போர்ச்சுகல், பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள எட்டு கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) முன்னேற்றத்தால் ஏற்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இம்மாநாட்டில் விவாதித்தனர்.

SACRU (Strategic Alliance of Catholic Research Universities) என்பது நான்கு கண்டங்களில் உள்ள எட்டு கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் வலையமைப்பாகும். இது மிலானிலுள்ள திருஇருதயக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும், கத்தோலிக்கச் சமூகப்  படிப்பினைகளால் ஈர்க்கப்பட்டு பொது நலனுக்காக உலகளாவிய கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இப்பல்கலைக் கழகங்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கிவருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2023, 13:00