ஹாங்காங்கிலிருந்து உரோமை வந்துள்ள இளையோர் ஹாங்காங்கிலிருந்து உரோமை வந்துள்ள இளையோர்  

வத்திக்கானில் குவிந்துள்ள ஹாங்காங் இளைஞர்கள்!

உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் நிறைந்த புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் காலநிலை மாற்றம் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டபோது புதிய உணர்வுகளைப் பெற்றேன் : ஜமெலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

லிஸ்பனில் உலக இளைஞர் தினத்தில் கலந்து கொள்ளும் 2,500 ஆசிய கத்தோலிக்கர்களின் ஒரு பகுதியாக, உரோமை நகர் வந்துள்ள ஹாங்காங் இளைஞர்கள், கிறிஸ்துவை நோக்கி ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளும் கத்தோலிக்கத் திருப்பயணிகளின் பெரிய குழுவில் தாங்களும் ஒரு சிறிய சமூகமாக ஒன்றிணைவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது எனக் கூறியுள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து திருப்பயணிகளாக உரோமை வந்துள்ள பல இளையோர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் தொடங்கும் உலக இளையோர் தினம் குறித்து தங்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வத்திக்கான் செய்திக்கு வெளிப்படுத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இவ்விளம் திருப்பயணிகளில் ஒருவரான ஜமெலின், எனது சிறுவயதில், எங்கள் குழுத் தலைவர்கள் முந்தைய உலக இளைஞர் தினக்  கொண்டாட்டங்களுக்குச் செல்வதைப் பார்த்தேன், அதனைக் கண்டபோது எனக்கு நிறைவான மகிழ்ச்சியை அளித்தது என்றும், இப்போது இந்நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

ஒரு சிறிய கத்தோலிக்கச் சமூகமாக இருக்கும் எங்களுக்கு, பெரியதொரு கத்தோலிக்கச் சமூகத்தின் பகுதியாக இருப்பது அவசியம் என்றும், அதுவே நிறைந்த பயனளிக்கும் என்றும் கூறியுள்ள ஜமெலின், வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நபர்களுடன் நேரத்தை செலவிடவிருப்பது தனித்துவமான மற்றும் அருமையானதொரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2023, 15:04