கர்தினால் மரேங்கோ கர்தினால் மரேங்கோ  (Vatican Media)

திருத்தந்தையின் மங்கோலியப் பயணம் மிக அழகான மகிழ்ச்சி

மங்கோலியாவில் கிறிஸ்தவ நம்பிக்கை மிகவும் பழமையான வேர்களைக் கொண்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

துன்பம், வருத்தம் மற்றும் வறுமையின் பிரதிபலிப்புக்களை விட மகிழ்ச்சி மேலோங்கும் ஒரு தருணமாக திருத்தந்தையின் மங்கோலியா திருத்தூதுப் பயணம் இருக்கும் என்றும், மிக அழகான மகிழ்ச்சியாக, மக்களின் நம்பிக்கை பயணத்திற்கு வழிகாட்டுவதாக இப்பயண நாள்கள் அமையும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Giorgio Marengo

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் குறித்து பீதேஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் மங்கோலியாவின் UlanBator அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Giorgio Marengo.

மங்கோலியப் பயணம் மிக அழகான மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் மரேங்கோ அவர்கள், நம்முடைய எல்லா துன்பங்கள் மற்றும் வறுமையைத் தாண்டி, மக்களின் இதயங்களில் இறைவன் எவ்வாறு செயல்படுகின்றார், அவரது அருளின் ஆற்றல் எவ்வளவு என்பதை சிந்தித்துப் பார்ப்பதுதான் இதயத்தை மிகுந்த நன்றியுணர்வுடன் வைத்திருக்கும் என்றும் கூறினார்.

கடந்த காலத்துடன் மீண்டும் இணைவது நமது கடமை என்று தான் உணர்வதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் மரேங்கோ அவர்கள், சில சமயங்களில் மங்கோலியாவில் கிறிஸ்தவம் அண்மையில் வந்ததாக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது என்றும், ஆனால் மங்கோலிய கிறிஸ்தவம் மிகப் பழமையானது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மங்கோலியாவில் கிறிஸ்தவ நம்பிக்கை மிகவும் பழமையான வேர்களைக் கொண்டுள்ளது என்றும், செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசுப்படையில் சில தளபதிகள் மற்றும், வீரர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் இருந்தனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் மரேங்கோ.  

மங்கோலிய மொழி மற்றும் கலாச்சாரத்தை ஆராய்வதில் சிரமங்கள் மற்றும் முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்துள்ள கர்தினால் மரெங்கோ அவர்கள்,  எல்லாவற்றையும் எளிதில் கொண்டு செல்லக்கூடியதாகத் திகழும் ஒரு நாடோடி கலாச்சாரம் மங்கோலியாவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2023, 13:05