பெல்சாட்சரின் விருந்தும் கைவிரல்கள் தோன்றி அரண்மனை உட்சுவரில் எழுதுதலும் பெல்சாட்சரின் விருந்தும் கைவிரல்கள் தோன்றி அரண்மனை உட்சுவரில் எழுதுதலும் 

தடம் தந்த தகைமை - பெல்சாட்சரின் விருந்து

திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அதைக்கண்டு அரசன் நடுக்கமுற்றான்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான். அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக்கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். உடனே அரசன், தன் தந்தை,

மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கிய, தானியேலை அழைத்து வரச் செய்தான். அரசன் அவரைப் பார்த்து, “இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடைஉடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.

அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாக, “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத்னேசருக்குப் பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார். ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்; அவரிடமிருந்து அவரது மேன்மை பறிக்கப்பட்டது. மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார். அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டுவரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆகையால் இறைவன் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, ‘கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது’ என எழுதினார், என்றார்.

உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர். அன்றிரவே கல்தேய அரசனாகிய பெல்சாட்சர் கொலை செய்யப்பட்டான்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2023, 10:20