Save the Children கிளை, வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற தடை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சத்துணவுப் பற்றாக்குறையால் வாடும் குழந்தைகளிடையே தொண்டாற்றி வந்த கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான Save the Children அமைப்பு, வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற தடை விதித்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.
Greenpeace, Amnesty International மற்றும் Human Rights Watch அமைப்புக்களைத் தொடர்ந்து, தற்போது Save the Children அமைப்பும் வெளிநாட்டு நிதியுதவித் தடைகளை எதிர்நோக்கி வருவதால், இவ்வமைப்பால் பயன்பெற்றுவந்த குழந்தைகளின் வருங்காலத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் அவ்வமைப்பில் பணியாற்றும் அருள்சகோதரி டாரதி பெர்னாண்டஸ்.
1919ஆம் ஆண்டு பிரிட்டனில் உருவாக்கப்பட்ட இந்த பிறரன்பு அமைப்பின் இந்தியக் கிளையான பால் ரக்ஷா பாரத்(Bal Raksha Bharat) அமைப்பு, 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் குறைந்தபட்சம் 16 மாநிலங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு நலம் தொடர்புடைய உதவிகளையும் கல்வியையும் வழங்கிவருகிறது.
அண்மைக்காலங்களில் அரசு சாரா அமைப்புக்கள் வெளிநாட்டு உதவிகள் பெறுவதை தடைச்செய்துவரும் இந்திய உள்துறை, Save the Children அமைப்பையும் தற்போது அதில் இணைத்துள்ளது.
ஏழைக்குழந்தைகளுக்கானப் பணியை ஆற்றி அவர்களின் மாண்பை பாதுகாக்க முனைந்துவரும் அமைப்புக்களை முடக்க அரசு முனைவது ஏன் என்ற கேள்வியை முன்வைத்த அருள்சகோதரி டாரதி அவர்கள், இக்குழந்தைகளின் நலவாழ்வுக்கு இனிமேல் யார் பொறுப்பேற்பார்கள் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.
விதிமீறல்கள் இருந்தால் அவைகளை சரிசெய்ய சட்டங்கள் உதவவேண்டுமேயொழிய, முற்றிலுமாக தடைச்செய்வது யாருக்கும் பயன் தராது என்ற அவர், மக்களின் வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டுமேயொழிய அதைத் தடுக்கக்கூடாது எனவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்