நேர்காணல் – மரியன்னை மாநாடு ஒரு முன்னோட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அம்மா என்ற வார்த்தை இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும் கட்டாயம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை. அது வெறும் வார்த்தை மட்டுமன்று அது ஒரு உணர்வு. ஆகஸ்ட் மாதம் 12 சனிக்கிழமை முதல், 15 செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் நடைபெற உள்ள மரியன்னை மாநாடு ‘‘மரியா நம் பயணத்தின் வழித்துணை‘‘ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சிறப்பிக்க இருக்கின்றது.
1921ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மரியன்னை மாநாட்டின் நூற்றாண்டு, மறைமாவட்ட பாதுகாவலரான தூய தோமாவின் 1950ஆவது ஆண்டு, 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றம், பெசண்ட் நகர் ஆரோக்கிய அன்னை திருத்தல பொன்விழா ஆண்டு, சென்னை மயிலை மறைமாவட்ட பாதுகாவலியாக அன்னை மரியா அறிவிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டு, கீழ்ப்பாக்கம் மரியாவின் மாசற்ற திருஇதய ஆலயத்தின் ஆண்டு என 2023ஆம் ஆண்டு மரியன்னை மாநாடு கொண்டாட 6 காரணங்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரியன்னை மா நாடுபற்றி இன்றைய நேற்காணலில் நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள்,
சென்னை மயிலை உயர்மறைமாட்ட அருள்பணியாளரான அருள்தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்கள், புனித அன்னை தெரசாவுக்கு நன்கு அறிமுகமானவர். நம் வாழ்வு இதழின் ஆசிரியர், சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய இயக்குனர், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத் தலைவர், அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுச் செயலர் என பல பொறுப்புக்களை சீரும் சிறப்புமாக ஆற்றியவர்.
தூது வரும் தேவ புறா, பூமியின் தேவதை, புதிய சாசனம் உள்ளிட்ட 11 நூல்களை எழுதிய அருள்பணி வின்சென்ஸ்ட் அவர்கள், சென்னை பெசன்ட் நகரில் அன்னை மரியாவை மகிமைப்படுத்த வானுயர்ந்த கவின்மிகு பேராலயம் எழுப்பிய பெருமைக்குரியவர். 2018-19 ஆண்டில் சென்னையில் நடந்த நற்கருணை மாநாட்டை திட்டமிட்டு ஒருங்கிணைத்தவரான அருள்தந்தை வின்சென்ட் அவர்கள் தற்போது பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தல அதிபராகவும் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பொதுநிலையினருக்கான பேராயரின் பதில்குருவாகவும், நடக்க இருக்கும் மரியன்னை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தந்தை அவர்களை மரியன்னை மாநாடு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்க்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்