விவிலியத் தேடல்: திருப்பாடல் 41-1, எளியோர் நலன் பேணுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரில் மகிழ்வோம்!' என்ற தலைப்பில் 40-ஆவது திருப்பாடலில் 16, 17 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டுவந்தோம். இவ்வாரம் 41-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'நோயுற்றவரின் மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 13 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது முதல் பகுதியில், எளியோர் நலனில் அக்கறை கொண்டிருப்போருக்கு இறைவன் அருளும் பேறுபலன்கள் குறித்துப் பேசுகின்றார் தாவீது. இரண்டாவது பகுதியில், தன் எதிரிகளின் நயவஞ்சகங்களையும் அவர்களின் கொடிய சிந்தனைகளையும் திட்டங்களையும் பட்டியலிடுகின்றார். மூன்றாவது பகுதியில், இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் மனம்தளர்ந்துவிடாமல் இறைவனின் பேருதவியை நாடி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இத்திருப்பாடலை வாசிக்கும்போது, தாவீது அரசர் நோயுற்று படுக்கையில் கிடந்தபோது இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. காரணம், அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இதனை உறுதிசெய்கின்றன. இப்போது 01 முதல் 03 வரையுள்ள இறைவார்தைளை இவ்வாரம் நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொள்வோம். இறையொளியில் அவ்வார்த்தைகளை இப்போது வாசிக்கக் கேட்போம். “எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார். படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்” (வசனம் 1-3).
இவ்வாண்டு ஜனவரி மாதம் கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நகர எல்.ஐ.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருபவர் மஞ்சுநாத். இவரது தந்தை கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவதி அடைந்தார். அப்போது அவரை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தினர். ஆனால், அவருக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அரசு அவசர மருத்துவ ஊர்தியில் (Ambulance) தனது தந்தையை மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிக்க உதவி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார் மஞ்சுநாத். ஆனாலும், அவருக்கு மருத்துவ அவசர ஊர்தி கிடைக்கவில்லை. இதையடுத்து மிகவும் சிரமப்பட்டு தனது தந்தையை மங்களூருவுக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார் மஞ்சுநாத். பின்னர், அவரை அங்கிருந்து மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத்தின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், தனது தந்தைக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்ததுபோல் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று எண்ணிய மஞ்சுநாத், தனது சொந்த செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக மருத்துவ அவசர ஊர்தி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அந்த வாகனத்திற்குத் தனது சொந்த செலவிலேயே ஓட்டுநர் ஒருவரையும் பணிக்கு அமர்த்தி இருக்கிறார். இப்போது அப்பகுதி மக்களால் மஞ்சுநாத் கனிவிரக்கம் கொண்டவராகவும் சான்றோராகவும் போற்றப்படுகிறார்.
எளியோர் நலனில் அக்கறை
இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் இரண்டு காரிங்களைக் குறித்து தாவீது அரசர் பேசுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம். முதலாவதாக, “எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்" என்கின்றார். இன்றைய உலகில் எளியோர் நலனில் அக்கறை கொள்பவர் யார் என்று கேள்வி எழுப்பினோமென்றால் அது மிகவும் விவாதத்துக்குரிய ஓன்றாகவே அமையும். அதற்கு முன்பாக யாரெல்லாம் எளியோர் என்று நாம் பட்டியலிடவேண்டும். எளியோர் என்ற வார்த்தை அதற்குரிய பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது, எளியோர் என்பது ஏழைகள், கைவிடப்பட்டோர், கையாலாகாத நிலையில் இருப்போர், பிறருடைய உதவிக்காக ஏங்கிநிற்போர், எப்போதும் பிறரை சார்ந்து வாழ்வோர், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோர் என அத்தனை வகையான மக்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் ‘எளியோர்’ என்ற வார்த்தை ஒருவரை சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும் தரம் பிரிகிறது. எளியவன் என்ற வார்த்தைக்கு வறியவன், இலகுவாய் அடையப்படுபவன், வழியில்லாதவன், அறிவில்லாதவன், குணத்தில் தாழ்ந்தவன் என்று தமிழ் விக்சனரியும் பொருள் தருகிறது. எப்படியிருந்தாலும், எளியவர் என்பவர் உதவிசெய்யப்பட வேண்டியவர் என்பது உறுதிப்படத் தெரிகின்றது.
மூன்றுவகை மனிதர்கள்
மனிதர்கள் கொண்டுள்ள செல்வத்தைப் பொறுத்து அவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். முதலாவதாக, பொருளாதாரத் தேவையே இல்லாத செல்வந்தர்கள். இவர்கள் பொருளை மேலும் மேலும் சேர்க்கவே ஆசைப்படுவர். எதையும் வாங்குவதற்கு இவர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள். பிறருடைய துன்ப துயரங்களும் வேதனை சோதனைகளும் இவர்களைத் துளியும் பாதிக்காது. இரண்டாவதாக, எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் மிதமான நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் தங்கள் பெற்றுள்ளவற்றில் எப்போதும் நிறைவடைய மாட்டார்கள். இவர்கள் செல்வந்தர்களை எட்டிப்பிடிக்க நினைப்பர். இவர்களில் 30 விழுக்காட்டினரே எளியோர் மீது அக்கறைகொண்டிருப்பர். மூன்றாவது நிலையில் இருப்பவர்கள்தான் எளியோர். இவர்கள் ஒருவேளை உணவிற்கே அல்லல்படுபவர்கள். இவர்கள் அதிகளவில் பொருள் சேர்க்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அன்றன்றையத் தேவைகளை நிறைவு செய்துகொண்டாலே போதும் என்று எண்ணுபவர்கள். மிக முக்கியமாக இவர்கள் தங்களைப்போலவே துயருறும் பிறரை எண்ணத்தால் அல், இதயத்தால் உணர்ந்துகொள்ள கூடியவர்கள். அதாவது, பிறரின் துன்ப துயரம் அறிந்து தங்களிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவர். ஒரேவார்த்தையில் சொல்லவேண்டுமானால் இவர்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள்.
இரண்டாவது கருத்தாக, எளியோர் நலனில் அக்கறை கொள்ளும் மனிதருக்கு இறைவன் வழங்கவிருக்கும் நற்பயன்களைப் பட்டியலிடுகின்றார் தாவீது அரசர். அதாவது, எளியோர்மீது அக்கறைகொள்ளும் மனிதரை, "துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார். படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்" என்று உரைக்கின்றார். சென்னை பாரிமுனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை முகநூலில் ஒருவர் பதிவுசெய்துள்ளார். அச்சம்வத்திற்கு இப்போது நம் செவிகளைத் திறப்போம். “பாரிமுனையிலிருந்து இராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் 150 ரூபாய் கேட்டார். நான் 100 ரூபாய் மட்டுமே தருவேன் என்று கூறினேன். பிறகு 120-க்கு உடன்பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது, அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதையோரத்தில் ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கவனித்தேன். குடித்துவிட்டு விழுந்திருக்கிறார் என்று நினைத்தேன். இல்லையென்று பிறகுதான் தெரிந்தது. ஆட்டோ டிரைவர் என்னிடம் "உங்க பின்னால சாப்பாடு பொட்டலம் இருக்கும், அதை எடுங்க சார்" என்றார். இருக்கைக்குப் பின்னால் இருந்த அந்தச் சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவரிடம் சென்று அவரைத் தட்டி எழுப்பினார். அவர் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்குப் பின்னாலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவர் முகத்தில் தெளித்து அவரை எழுப்பி உட்கார வைத்தார். “இந்தாப்பா சாப்பாடு... எழுந்து சாப்பிடு...” என்றார். மனிதரின் தலை ஆடிக்கொண்டு இருந்தது. பாட்டிலைத் திறந்து தண்ணீர் புகட்டினார். என் பக்கம் திரும்பி "ஐந்து நிமிடம் இதோ சார். வந்துர்ரேன்" என்றார். உணவு பொட்டலத்தைப் பிரித்து அவர் முன்னால் வைத்தார். சாம்பார், இரசம், பொரியல், கூட்டு எல்லாம் தனித்தனியாகப் பிளாஸ்டிக் குவளைகளில் இருந்தன. அப்போது, அவ்வழியே போய்க்கொண்டிருந்த ஒருவர் அவரருகில் வந்து "நீ போ அண்ணா. நான் பாத்துக்கிறேன்" என்று கூறியவரிடம், "பரவாயில்ல... நீ போப்பா.. நான் பார்த்துக்கிறேன்" என்றார். பின்னர் அந்தப் பிளாஸ்டிக் குவளைகளைப் பிரித்து சோற்றில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்தார். அம்மனிதர் இலையை தன்னிடம் இழுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும்தான் எழுந்து வந்தார் ஆட்டோ டிரைவர். ஆட்டோவைக் கிளப்பியவரிடம் "உங்களுக்குத் தெரிஞ்சவரா?" என்று கேட்டேன். "யாரோ எவரோ... யாரு கண்டா...கொஞ்சம் புத்தி மாறாட்டம் போலத் தெரியுது. பசியில விழுந்து கிடக்கிறார். நான் தினமும் மதியம் எங்கயாவது நிறுத்தி சாப்பிடறப்போ மூணு பேருக்குப் பொட்டலம் வாங்கிடுவேன் சார். இந்த மாதிரி ரோட்ல விழுந்துகிடக்குற யாரையாவது பார்த்து கொடுத்துடுவேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கு கொடுத்துட்டேன். இவரு மூன்றாவது ஆளு. ஏதோ நம்மால முடிஞ்சது அவ்ளோதான்..." என்றார். இந்த மனிதரிடம்தான் முப்பது ரூபாய்க்கு பேரம் பேசினேனா என்று நினைத்தபோது எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது என்று தனது அனுபவத்தை கூறி முடிக்கின்றார்.
யாரெல்லாம் பேறுபெற்றவர் என்று தாவீது அரசர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். திருப்பாடலின் தொடக்கத்திலேயே. “நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் என்று நற்பேறு பெற்றவர் யார் என்பது குறித்து எடுத்துரைக்கும் தாவீது அரசர், “அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்” (காண்க திபா 1:1-3) என்று அவர்தம் பண்பு நலன்களையும் எடுத்துக்காட்டுகின்றார். ஆகவே, எளியோர்மீது எப்போதும் இரக்கம் கொண்டு அவர்தம் நலன்களில் அக்கைறை கொள்வோம். அதன்பயனாக ஆண்டவர் நமக்கருளும் அருள்வரங்களை பெற்று மகிழ்வோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்