எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோரிடையே துறவுசபைகள்

எத்தியோப்பியாவிலிருந்து குடிபெயர முயலும், மற்றும் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வை முன்னேற்ற கத்தோலிக்க சபைகள் முயற்சி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எத்தியோப்பியாவின் வடபகுதியில் இடம்பெறும் ஆயுத மோதல்களில் இருந்து தப்பும் நோக்கத்துடன் சவுதி அரேபியாவில் அடைக்கலம் தேட முயலும் எத்தியோப்பிய மக்களை சவுதி எல்லைப் பாதுகாப்புப் படையினர்  சுட்டுக் கொலை செய்துவரும் நிலையில், அவ்வகதிகளை நாட்டிற்குள்ளேயே நிலைநிறுத்தி புது வாழ்வை வழங்க முயன்றுவருகின்றன அந்நாட்டிலுள்ள கத்தோலிக்க துறவு சபைகள்.

2022 மார்ச் மாதம் முதல் 2023 ஜூன் வரையுள்ள மத்திய கிழக்குப் பகுதியின் துயர நிலைகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Human Rights Watch மனித உரிமைகள் அமைப்பு, எத்தியோப்பிய அகதிகள் சவுதி எல்லையில் கொல்லப்பட்டது பற்றியும்  குறிப்பிட்டுள்ளதோடு, அது குறித்த தொடர்ந்த ஆய்வை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எத்தியோப்பியாவிலிருந்து குடிபெயர முயலும், மற்றும் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வை முன்னேற்றி அவர்களை நாட்டிற்குள்ளேயே சொந்தக் காலில் நிற்க உதவி வருகின்றன கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள்.

குழந்தைகளுடன் அனாதைகளாக நிற்கும் இளந்தாய்மார்களுக்கு தொழில் கல்வியை வழங்குவதுடன், அவர்களுக்கு வேலை எடுத்துக் கொடுத்தும் உதவி வருகின்றன.

JRS என்னும் இயேசு சபையினரின் தொழில் பயிற்சி மையம், சலேசிய பெண்துறவியர் சபையின் தொழில் கல்வி மையம், அன்னை தெரேசாவின் பிறரன்பு புதல்வியர் சபையின் அடைக்கல மையம், சலேசிய சபையின் குழந்தைகள் மையம், Ursuline சகோதரிகளின் கல்வி மையம் என பல்வேறு கத்தோலிக்க துறவுசபைகளின் மையங்கள், புலம் பெயர விளையும், மற்றும் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுடன் சேவையாற்றி வருகின்றன.  

தங்கள் துணையால் கைவிடப்பட்ட கருத்தாங்கிய இளம்பெண்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கி அவர்களின் பேறுகாலத்தில் உதவி வருகிறது அன்னை தெரேசாவின் பிறரன்பு புதல்வியர் துறவு சபை.

இவ்விளம் தாய்மார்கள் குழந்தை பெற்றவுடன் அந்த குழந்தைகளுக்கும், தாய்களுக்கும் புகலிடம் கொடுப்பதுடன், தொழில் கல்வி பயிற்சிக்கென  சலேசிய மற்றும் உர்சிலின் சபை சகோதரிகளிடம் அனுப்பப்படுகின்றனர்.

மேலும், இவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வெலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் பணியை இயேசு சபையினர் செய்துவருகின்றனர்.

எத்தியோப்பியா நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுடன், எரிட்ரியா, ஏமன், சூடான், கோங்கோ என பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருகின்றன கத்தோலிக்க துறவு சபைகள்.

இது தவிர ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 40,000 எத்தியோப்பிய மக்கள் வெறுங்கையுடன் சவுதி அரேபியாவிலிருந்து எத்தியோப்பியாவிற்குள் திரும்பிவருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2023, 14:56