2027 உலக இளையோர் தினம் குறித்து தென்கொரியா மகிழ்ச்சி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2027ஆம் ஆண்டின் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் தென் கொரியாவின் தலைநர் சியோலில் இடம்பெறும் என்ற திருத்தந்தையின் அறிவிப்பு குறித்து அந்நாட்டு கத்தோலிக்கர்களும் அரசியல்வாதிகளும் பெருமகிழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
லிஸ்பனில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் இறுதி நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வறிவிப்பை வெளியிட்டவுடன் அங்கு குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்கொரிய இளையோர் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளியிட்டதோடு, தற்போது அந்நாட்டு கத்தோலிக்கர்களும், தலத்திருஅவைத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டு வருகின்றனர்.
திருத்தந்தை இவ்வறிவிப்பை வெளியிட்டவுடனேயே திருத்தந்தைக்கு நன் நன்றியை பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்ட சியோல் பேராயர் Peter Chung Soon-taek அவர்கள், லிஸ்பன் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இருந்து கற்றுக்கொண்டவைகளின் துணையுடன் சியோல் கொண்டாட்டங்களூகு தயாரிப்போம் என தெரிவித்தார்.
கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இளையோரிடையேயான பணிகளை முடுக்கிவிடும் நோக்கத்துடன், வத்திக்கான், தென்கொரிய அரசு, சியோல் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்காகத் தயாரிக்க உள்ளதாகவும் பேராயர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.
கொரிய திருஅவை, மற்றும் கொரிய கலாச்சாரத்தின் ஆழத்தையும் தனிச்சுவையையும், இளையோர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்போர் அனைவரும் உணரும்படியாக தலத் திருஅவையின் தயாரிப்புக்கள் இருக்கும் எனவும் தெரிவித்தார் பேராயர் Chung.
உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, தென்கொரிய நாடு முழுமைக்கும் உரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதையும் தெரிவித்த பேராயர் Chung அவர்கள், திருத்தந்தையின் அமைதி முயற்சிகளும் உலக இளையோரின் கொண்டாட்டங்களும் கொரிய தீபகற்பத்திற்கு அமைதியைக் கொணரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்