வியட்நாமில் அரசுத் தலைவர் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் சந்திப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 7, இத்திங்களன்று, வியட்நாம் அரசுத் தலைவர் Vo Van Thuong அவர்கள் Ho Chi Minh நகரில் உள்ள தேசிய ஆயர்பேரவையின் தலைமையகத்தில் அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்து திருப்பீடத்திற்கும் ஆசிய தேசத்திற்கும் இடையிலான உறவுகளின் புதிய நிலையை உறுதிப்படுத்தினார்.
வியட்நாம் தலைநகரில் திருப்பீடப் பிரதிநிதி தன் உறைவிடத்தைக் கொண்டுச் செயல்படுவார் என இரு நாடுகளுக்கும் இடையே ஜூலை மாதம் 27ஆம் தேதி, வத்திக்கானில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் சமுதாயத்திற்கு, குறிப்பாக கோவிட்-19 நோய்த்தொற்றின்போது கத்தோலிக்கத் திருஅவை வழங்கிய பங்களிப்பு மற்றும் பணிகள் குறித்து அரசுத் தலைவர் Thuong அவர்கள் அங்கீகரித்துள்ளதுடன், அண்மையில் ஐரோப்பாவிற்கும், குறிப்பாக, ஜூலை 27 அன்று வத்திக்கானுக்கும் தான் மேற்கொண்ட பயணம் குறித்தும் ஆயர்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான சந்திப்பு தான் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் நிகழ்ந்தது என்றும், உடன்பிறந்த உறவு குறித்த அவரின் சிந்தனைகளைத் தான் வெகுவாகப் பாராட்டியதாகவும், இதே எண்ணத்துடன்தான் வியட்நாமும் பயணிக்கிறது என்றும் ஆயர்களிடம் தெரிவித்தார் Thuong.
இறுதியாக, திருத்தந்தையுடன் அரசுத் தலைவர் Thuong அவர்கள் மேற்கொண்ட இந்தச் சந்திப்பிற்காகவும், இப்புதிய ஒப்பந்தத்திற்காகவும் அந்நாட்டு ஆயர்பேரவையும் அவருக்கு நன்றிதெரிவித்ததுடன், அவருக்கும் அவர் துணைவியாருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய அனைவரும் உடன்பிறந்தோரே (Fratelli Tutti) என்ற திருமடலின் வியட்நாம் மொழிபெயர்ப்பு பிரதியை வழங்கினார் பேராயர் Nguyễn Năng
1975ஆம் ஆண்டில் வியட்நாம் நாடு ஒன்றாக இணைக்கப்பட்டதிலிருந்து திருஅவைச்சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டிலிருந்துதான் திருப்பீடப் பிரதிநிதி, வேறு நாட்டில் தங்கிக்கொண்டு, அவ்வப்போது வியட்நாம் வந்து சென்று கொண்டிருந்தார். கடந்த ஜூலை 27ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வியட்நாமிலேயே தங்கிச் செயல்பட திருப்பீடத் தூதுவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்