இயேசுவின் உவமையில் வரும் இரு மைந்தர்கள் இயேசுவின் உவமையில் வரும் இரு மைந்தர்கள் 

பொதுக் காலம் 26-ஆம் ஞாயிறு : ஒரே மனத்தவராய் வாழ்வோம்

பிரிவினைக்கு இடமளிக்காது, ஒரே எண்ணமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய்த் திகழ்ந்து நம்மையும் நம் இறைவனையும் மகிழ்ச்சியுறச் செய்வோம்.
இறைவன் தரும் சமபந்தி விருந்து!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  எசேக் 18: 25-28    II.  பிலி 2: 1-11      III.  மத் 21: 28-32)                     

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே புத்த மதத் துறவியர் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் புரையோடிப்போயிருந்தது. ஒவ்வொருவரும் தான் மட்டுமே கடவுளுக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்தொதுக்கினர். அவர்கள் ஒன்றித்து வாழ்வதை விட்டுட்டுட்டு தனித்தனி தீவுக்கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர். இன்னும் மோசமாக, நேரிய வாழ்வு வாழ்ந்து வந்த அம்மடத்தின் தலைவரை குறைகூறி  அவரோடு அடிக்கடி தர்க்கத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைக் கண்டு பொறுக்க இயலாமல் ஒரு நாள் அத்துறவு மடத்தின் தலைவர்  தன்னை விட அனுபவத்தில் சிறந்த இன்னொரு குருவைத் தேடிப் போனார். அவரிடத்தில் தன் பிரச்சனையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். உங்களில் யாருமே அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி உங்கள் துறவு வாழ்வு செழிக்கும்?" என்று கேட்டார். இதைக் கேட்ட அத்துறவு மடத்தின் தலைவர் வியப்பு மாறாமலேயே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த தனது துறவியரிடம் விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் புத்தராக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகத் தொடங்கினர். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்தது. ஒவ்வருவரும் மற்றவரை மதிக்கத் தொடங்கிய நிலையில் அவர்களிடையே நிலவிவந்த வேறுபாடுகள் களைந்துபோயின. அத்துறவு இல்லத்தில் ஆழமான இறைபக்தியும், உண்மையான அன்பும், ஒருமித்த மகிழ்வும், ஒற்றுமையும், அமைதியும், புரிந்துகொள்ளுதலும், ஏற்றுக்கொள்ளுதலும் நிறைந்து காணப்பட்டன

பொதுக் காலத்தின் 26-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இரண்டு முக்கியமான கருத்துக்களை வலியுறுத்துகின்றன. முதலாவதாக, நல்லவர் தீய வழியை தேர்வு செய்து வாழ்ந்தால் அவர்கள் அழிவர். ஆனால் அதேவேளையில், தீயவர் தங்களின் தவறுகளை உணர்ந்து மனம்மாறினால் அவர்கள் புதுவாழ்வு பெறுவர் என்கிறது இன்றைய முதல் வாசகம். ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! என்ற இறைவார்த்தைகள் இவ்வதிகாரத்தின் 29-ஆம் இறைவசனமாக மீண்டும் ஒலிக்கிறது. அப்படியென்றால், எகிப்திலிருந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குப் பல்வேறு இன்னல்கள் மத்தியில் மோசே வழியாக ஆண்டவராம் கடவுளால் மீட்டுக்கொண்டுவரப்பட்ட இஸ்ரயேல் மக்கள் வீசிய கேள்விக்கணைகள் அவருடைய உள்ளதை ஆழமாகக் காயப்படுத்தி இருக்கவேண்டும். அதனால்தான் இரண்டுமுறை, “என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!” என்று இஸ்ரயேல் மக்களைச் சாடுகின்றார் இறைவன். மேலும் கடவுளை மட்டுமே தங்களின் மீட்பராக ஏற்று வாழ்ந்த அம்மக்கள், சூழ்நிலைகளின் கைதிகளாகி தங்களின் கடினச் சொற்களால் கடவுளையே குறைகூறும் அளவிற்குத் தங்களைத் தாங்களே நேர்மையற்ற நிலைக்குக் கையளித்துக் கொண்டனர். இதனாலேயே, “நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்” (வசனம் 24) என்று தனது வார்த்தைகளில் வேதனையை வெளிப்படுத்துகின்றார் இறைத்தந்தை.

இன்றைய நற்செய்தியில் 'இரு புதல்வர்கள்' உவமையில் இதைத்தான் எடுத்துக்காட்டுகிறார் இயேசு. ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்று தந்தை தனது இரண்டாவது மகனிடம் கூறியபோது,  ‘நான் போகிறேன் ஐயா!’ என்று மறுமொழி கொடுத்துவிட்டு போகவில்லை. அதாவது, தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக்கொண்டு மேலாதிக்கச் சிந்தனையோடு வாழ்ந்துகொண்டிருந்த பரிசேயர், சதுசேயர், திருச்சட்ட அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக்குருக்கள் ஆகியோரின் நேர்மையற்ற வாழ்வை எடுத்துக்காட்டவே இயேசு இந்த உவமையை எடுத்துரைக்கின்றார். அதனால்தான், "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்" (மத் 23:2-3) என்கின்றார் இயேசு. மேலும் “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்” (காண்க மத் 23:25-26) என்று கூறி, அவர்களின் பொய்யான வாழ்வை எல்லோருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.

இரண்டாவதாக, “பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்” என்கின்றார் கடவுள். இங்கும் இதே கருத்தை ஆண்டவராகிய கடவுள் இரண்டுமுறை எடுத்துக்காட்டுகின்றார். அதாவது, தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திருந்தி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர் (வசனம் 21-22).

இப்போது நாம் மீண்டும் நற்செய்திக்குத் திரும்புவோம், இயேசு கூறும் உவமையில், மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். என்று சுட்டிக்காட்டுகின்றார். ஆக, இயேசு கூறும் உவமையில் இரண்டு குழுவினரை நம் கண்முன் நிறுத்துகிறார். பரிசேயர், சதுசேயர், திருச்சட்ட அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக்குருக்கள் ஆகியோரைக் கொண்ட முதல் குழுவினர். இவர்களை திராட்சைத் தோட்டத்திற்குப் போகிறேன் என்று கூறிவிட்டு போகாத இரண்டாம் மகனுக்கு ஒப்பிடுகிறார். மேலும் சமாரியர், வரிதண்டுவோர், விலைமகளிர், நோயாளர்கள் ஆகியோரை, திராட்சைத் தோட்டத்திற்குப் போகமாட்டேன் என்று கூறிவிட்டு பின்னர் மனமாறிச் சென்ற முதல் மகனுக்கு ஒப்பிடுகின்றார். அதனால்தான், இந்த உவமையின் இறுதியில், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” (வசனம் 31-32)  என்று சாடுகின்றார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த உவமையின் தொடக்கத்தில், “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”  என்றும்,  “இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்றும் இரண்டு கேள்விகளை எழுப்பி அவர்களைச் சிந்திக்கவும் அழைக்கின்றார் இயேசு. இந்தக் கேள்விகள் இரண்டும் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

இன்றைய நம் இந்தியச் சமுதாயத்தில் சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஏழை-பணக்காரர் என எண்ணற்ற பாகுபாடுகள் நிலவுவதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் எத்தனை எத்தனை வன்முறைகள்! அப்பப்பா... அவைகள் சொல்லி மாளாது. ஒடிசாவின் கந்தமாலில் கிறிஸ்தவர்களு எதிராக நிகழ்த்தப்பட்ட மதவெறித் தாக்குதல்களை நம்மால் மறந்துவிட முடியுமா? அல்லது, அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை மற்றும் கொலைவெறிச் செயல்களைத்தான் நாம் மறந்துவிட முடியுமா? அப்படியென்றால், இதற்கு என்னதான் தீர்வு என்று சிந்திக்கும்போது, அதற்கான வழியை, அதாவது, நாம் இறைத்தந்தையின் ஒரே பிள்ளைகளாய் வாழ்வதற்கான தீர்வை இன்றைய இரண்டாம் வாசகத்தில் முன்னிறுத்துகின்றார் புனித பவுலடியார். கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும் (வசனம் 1-4) என்று அறிவுறுத்துவதுடன், நம் அனைவரையும் இறைத்தந்தையுடன் ஒன்றிணைப்பதற்காக சிலுவை மட்டும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு நமக்காகத் தன்னைத் தாரைவார்த்த இயேசுவின் தியாகப் பலியை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுகின்றார் பவுலடியார்.

ஒரு ஏழை விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடைய கழுதையின் காதில் மாட்டிவிட்டார். அதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவரிடம் சென்று ”இந்தக் கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்குப் பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்” என்றார். உடனே ஏழை, "அப்படியானால் 1000 ரூபாய்  தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றார்  அதற்கு அந்த வைரவியாபாரி அதனை இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ”1000 ரூபாய் அதிகம். வேண்டுமானால் 500 ரூபாய் தருகிறேன், இல்லை என்றால் அது எனக்கு வேண்டாம்” என்றார். “அப்படியானல் பரவாயில்லை அது இந்தக் கழுதையின் காதிலேயே இருக்கட்டும்" என்று கூறிவிட்டு நடக்கலானார் அந்த ஏழை மனிதர். எப்படியும் அந்த ஏழை அந்த வைரக்கல்லை 500 ரூபாய்க்குத் தன்னிடம் தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தார் வைரவியாபாரி. அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி 5000 ரூபாய் கொடுத்து அந்த வைரக்கல்லை வாங்கிக் கொண்டார்.  

இதை சற்றும் எதிர்பாராத அந்த வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் 5000 ரூபாய்க்குக் கொடுத்துவிட்டு இவ்வளவு மகிழ்ச்சியாகச் செல்கிறாயே! நீ நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றார். அதற்கு அந்த ஏழை பலத்த சிரிப்புடன், “யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகைதான். எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன், நீயோ, அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் 500 ரூபாய்க்காக அதை இழந்துவிட்டாயே! உண்மையில் நீதான் மிகப்பெரிய முட்டாள்“ என்றவாறே நடக்கலானார் அந்த ஏழை மனிதர். இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம். கடவுளுக்கும் எனக்கும் உண்மையான மகிழ்ச்சியைக்  கொடுக்கக் கூடியது எது என்று நாம் ஆழ்ந்து சிந்தித்தால், அதை மட்டும்தான் தெரிந்துகொள்ள முன்வருவோம். ஆகவே, கட்சிமனப்பான்மைக்கும் வீண்பெருமைக்கும், வேற்றுமைக்கும் இடம் கொடாது, ஒரே எண்ணமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய்த் திகழ்ந்து நம் இறைவனை மகிழ்ச்சியுறச் செய்வோம். அதற்கான இறையருளைப் பெற இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2023, 13:36