கோலியாத்தை வீழ்த்திய தாவீது கோலியாத்தை வீழ்த்திய தாவீது 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 44-1 : ஆண்டவரால் வெற்றிகொள்வோம்!

நமது அன்றாட வாழ்வில் ஆயுதங்களை நம்புவதைவிட ஆண்டவரை நம்புவோம்.
திருப்பாடல் 44-1 : ஆண்டவரால் வெற்றிகொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஒளியும் உண்மையும் நமது வழிகள்’ என்ற தலைப்பில்!' 43-ஆவது திருப்பாடலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொண்டுவந்தோம். இவ்வாரம் 44-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'பாதுகாப்புக்காக வேண்டல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 23 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த திருப்பாடலையும் வாசிக்கும்போது இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது. முதல்பகுதியில் மூதாதையர் காலத்தில் எப்படியெல்லாம் கடவுளின் கைவன்மை அவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தது என்பதை எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பகுதியில், தங்களின் எதிரிகளால் தாங்கள் படும் கொடுந்துயரங்கள் குறித்தும், தங்களின் நேரிய வழிகள் குறித்தும் விளக்குகின்றார். மூன்றாவது பகுதியில், இந்த இக்கட்டானச் சூழலில் கிளர்ந்தெழுந்து வந்து தங்களைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் குரலெழுப்பி மான்றாடி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். போரும் அச்சமும் நிறைந்த சூழலில், கடவுளின் அருட்கர உதவியை மன்றாடி இந்தத் திருப்பாடலை அவர் எழுதியிருக்க வேண்டும் என்பது நமக்குப் புலனாகிறது. இப்போது 01 முதல் 08 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளைப் பக்தியுணர்வுடன் வாசிப்போம்.

கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்; எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர். உமது கையால் வேற்றினத்தாரை விரட்டியடித்து, எந்தையரை நிலைநாட்டினீர்; மக்களினங்களை நொறுக்கிவிட்டு எந்தையரைச் செழிக்கச் செய்தீர். அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை; அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை. நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும் உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன. நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே. எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர். எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம் (வசனம் 01-08).

நானூறு ஆண்டுகளாக எகிப்தில் அடிமைத்தளையில் உழன்ற இஸ்ரேல் மக்களை கடவுள் எப்படியெல்லாம் கரம்பிடித்து நடத்திவந்தார் என்பதையும், அவர்கள் பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு வந்தது வரை எத்தனை விதமான எதிரிகளைப் போரில் சந்தித்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். அதன்பிறகு நீதித்தலைவர்கள் காலம் தொடங்கி மக்கபேயர் காலவரை இஸ்ரேல் மக்கள் போர்களாலும், வன்முறைகளால், அடிமைத்தனங்களாலும் பெரிதும் அல்லலுற்றார்கள். சுருக்கமாகக் கூறவேண்டுமெனில் இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்து போர் என்பது பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. இஸ்ரயேல் மக்கள் இந்த வரலாற்றினைத் தங்களின் பிள்ளைகளுக்கு வாய்மொழி வழி கதைகள் வழியாக எடுத்துரைப்பது வழக்கம். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடந்துவந்த பாதையைத் தங்களின் பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பதை மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதினர். குறிப்பாக, தோரா என்று சொல்லக்கூடிய பழைய ஏற்பாட்டின் முதல் 5 நூல்களான தொடக்கநூல், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம் ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிப்பதை மிகமுக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர். "கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்; எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்" என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

இங்கே தாவீது தொடக்க காலம் தொடங்கி தனது காலம் வரை கடவுள் தான் தெரிந்துகொண்ட இஸ்ரேல் மக்களுக்குச் செய்த அரும்பெரும் செயல்களையும், அவர்களைக் காத்த அவரின் கைவன்மையையும் மீண்டும் நினைவுகூர்ந்து தங்களையும் அவ்வாறே பாதுகாக்கவேண்டுமென வேண்டுகிறார். "அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை; அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை. நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும் உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன" என்ற தாவீதின் வார்த்தைகள், இன்றைய உலகில் ஆண்டவரை நம்பாமல் ஆயுதங்களை நம்பி வாழும் மதியற்ற ஆட்சியாளர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இவர்கள் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரைக் கொன்றுகுவிப்பதற்காக ஆயுதங்களை வாரிக்குவிக்கின்றனர். இன்று உலகில் ஆயுத வர்த்தகம் அமோகமாக நடைபெறுகின்றது. ஒருபுறம் அமைதிக்கு அறைகூவல் விடுத்துவிட்டு மறுபுறம் தாங்கள் தயாரித்த ஆயுதங்களை விற்பனை செய்து அமைதிக்கு எதிராகக் குந்தகம் விளைவிக்கும் இரட்டைவேடம் கொண்ட ஆட்சியாளர்களைப் பார்க்கின்றோம். தீவீரவாதத்தை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மறுபுறம் அதனை மறைமுகமாக வளர்ந்துவிடும் அக்கிரமச் செயலின் உச்சம் இது! கடவுளை நம்பி ஆட்சி செய்பவர்கள் கண்ணியமற்ற முறையில் ஆட்சி செய்யமாட்டார்கள். அவர்கள் நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான அனைத்து நன்னெறி வழிகளையும் ஆண்டவரிடத்தில் மட்டுமே தேடுவார்கள். ஆண்டவருக்குத் தெரியும் இந்த நாட்டை எப்படி வழிநடத்துவது என்றும், அவரதுக் கரங்களில் தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்றும் உணர்ந்து செயல்படுவார்கள். ஆக, ஒரு நல்ல தலைவருக்குரிய அனைத்துக் குணங்களையும் தாவீதிடத்தில் காண்கின்றோம். இதனை தனது முன்னோர்களான இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்து படித்தறிந்து கொள்கின்றார் அவர். அதனால்தான், “நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே” என்று தொடர்ந்து கூறகின்றார். இஸ்ரயேல் மக்களைக் காத்து வழிநடத்தும் மிகப்பெரிய அரசராக விளங்கும் தாவீது, தான் ஒரு பேரரசர் என்ற கர்வமின்றி, தன்னை இத்தகையதொரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திய என்றுமுள்ள இறைவனை மட்டுமே அரசர் என்றழைகின்றார்.

மூன்றாவதாக, "எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்" என்கின்றார் தாவீது அரசர். அவரின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு சிறுவனாகப் பெலிஸ்தியர்களின் வீரன் கோலியாத்தை கொன்றொழித்த நிகழ்வு நமது நினைவுக்கு வருகின்றது. கோலியாத்தின் தோற்றம் மற்றும் அவன் அணிந்திருந்த போர்க்கருவிகள் எந்தளவுக்குக் கனமானவை என்பதை வாசிக்கும்போது நமக்கே பேரச்சத்தைக் கொடுக்கின்றது. அப்பகுதியை இப்போது வாசிப்போம். அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம். அவன் வெண்கலத் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கலத்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான். கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான். அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழுகிலோ இரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான் (1 சாமு  17:4-7). ஆக, இப்படிப்பட்ட ஒரு மாவீரனை எப்படி சிறுவனான தாவீது ஒரு சிறிய கவண்கல்லைக் கொண்டு வீழ்த்தியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்புவோமேயானால் அது ஆண்டவரால் மட்டுமே நிகழ்ந்தது என்று நாம் சுலபமாகக் கூறிவிட முடியும். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் (வசனம் 45-46) என்று கூறும் தாவீதின் இறைநம்பிக்கைகொண்ட வார்த்தைகள், அவர் ஆயுதங்களை அல்ல, ஆண்டவரையே நம்பி போரிட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவேதான், "எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர். எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம்"  என்று தாவீது தொடர்ந்து கூறும் வார்த்தைகள் அவர் கோலியாத்தின்மீது கொண்ட வெற்றியினால் விளைந்த வார்த்தைகளாக வெளிப்படுகின்றன என்பதைப் பார்க்கின்றோம்.

ஆகவே, நமது அன்றாட வாழ்வில் ஆயுதங்களை நம்புவதைவிட ஆண்டவரை மட்டுமே நம்புவோம். இங்கே ஆயுதங்கள் என்பது போர்க்கருவிகளை மட்டும் குறிப்பதல்ல, மாறாக, இறையச்சமற்ற மனம், இறைநம்பிக்கையற்ற வாழ்வு, தன்னலம், பேராசை, அதிகாரவெறி, ஆணவவெறி, பொருளாசை, பகைமை, பிரித்தாளும் சூழ்ச்சி, அமைதியைக் குலைத்தல் ஆகிய மனிதருக்கு உள்ளேயிருக்கும் ஆயுதங்களையும் குறிக்கின்றன என்பதை உணர்வோம். தாவீதின் வழியில் ஆயுதங்களை அல்ல ஆண்டவரையே நம்பி வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2023, 10:28