மதசமூகங்களுக்கிடையே இணக்கமும் மகிழ்வும் பகிரப்படவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
செப்டம்பர் 19 முதல் 28 வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அனைவருக்கும் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கோவா பேராயர், கர்தினால் Filipe Neri Ferrao அவர்கள், மதசமூகங்களுக்கிடையே இணக்கமும் மகிழ்வும் பகிரப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
ஏனைய மத பாரம்பரியங்களில் காணப்படும் ஆன்மீக மற்றும் ஒழுக்க மதிப்பீடுகள் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும் என தன் வாழ்த்துச் செய்தியில் அழைப்புவிடுக்கும் கர்தினால் பெர்ராவோ அவர்கள், இந்து சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
தடைகள் அகற்றப்படல், ஞானத்தில் வளர்ச்சி, ஒன்றிப்பை ஊக்குவித்தல் போன்றவைகளுக்கு அழைப்புவிடுக்கும் இந்த விழா, அதன்வழி ஒன்றிணைந்து வாழ்வதன் மகிழ்ச்சி, பகிர்வதில் இன்பம், கலாச்சார ஒன்றிணைவு போன்றவைகளுக்கான சூழலை உருவாக்கித் தருகின்றது எனவும் தன் செய்தியில் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் கர்தினால் பெர்ராவோ.
ஏனைய மத பாரம்பரியங்களில் காணப்படும் நன்மதிப்பீடுகளை கத்தோலிக்கர்கள் அங்கீகரித்து ஊக்குவிப்பதை திருஅவை படிப்பினைகள் எதிர்பார்க்கின்றன என விநாயக சதுர்த்திக்கான தன் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார் கோவா கர்தினால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்