பெண்விடுதலை, மேம்பாட்டிற்காக உழைக்கும் பங்காளாதேஷ் காரித்தாஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பங்களாதேஷில் உள்ள CJW என்னும் கைவினைப்பொருட்கள் செய்யும் பெண்கள் அமைப்பானது பெண்களுக்கு மாண்பை அளித்து, அவர்களது திறன்களை மேம்படுத்துகிறது என்றும், இதனால் பெண்கள் தங்கள் குடும்பப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார் பேராயர் Bejoy N D'Cruze
கடந்த 50 ஆண்டுகளாக பங்களாதேஷ் காரித்தாஸ் உதவியால் இயங்கி வரும் CJW என்னும் சணல் கைவினைபொருட்கள் செய்யும் பெண்கள் அமைப்பினைப் பாராட்டி இவ்வாறு கூறியுள்ளார் டாக்கா மறைமாவட்டப் பேராயர் Bejoy N D'Cruze.
பங்களாதேஷ் பெண்கள் பணியிடங்களில் நுழைய ஊக்கப்படுத்தியுள்ள இவ்வமைப்பினால் இலட்சக் கணக்கான பெண்கள் தொழிற்சாலைகள் மற்றும் கைவினைப் பொருள் பட்டறைகளில் பணிபுரிந்து, குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதைக் காண முடிகின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் N D'Cruze.
இயேசு கிறிஸ்து பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கவும், வீடற்றவர்களுக்கு தங்குமிடம் கொடுக்கவும், ஆடைகளை கொடுக்கவும் கற்றுக் கொடுத்தார் என்பதனை சுட்டிக்காடிய பேராயர் D'Cruze அவர்கள் பெண்களுக்காகப் பணியாற்றும் இவ்வமைப்பும் இயேசுவின் வழியில் வீடற்றவர்களுக்கு வீட்டையும் உணவில்லாதவர்களுக்கு உணவையும் வழங்கி சிறப்புடன் செயலாற்றுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தரமான கைவினைஞர் தயாரிப்புகளுக்காக பல ஆண்டுகளாக தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ள இந்த அமைப்பில் கிராமப்புறங்களை சார்ந்த ஏறக்குறைய 6,000 பெண் கைவினைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
பெண் விடுதலைக்கு பங்களிக்கவும், பயிற்சி மற்றும் கைவினைப் பணிகளின் வழியாக அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் விரும்பி உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது, கைவினைஞர்கள் கூட்டுறவு மேலாண்மை (அமைப்பு, நிர்வாகம், கணக்கியல்) பற்றிய பயிற்சி, சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்தல், பூர்வீக பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பராமரிப்பு திட்டங்கள் மற்றும் சேவை ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்