பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ 

சமய நல்லிணக்கத்தின் வழியாக உலக அமைதி, நிலையான வளர்ச்சி

இந்தியாவிலுள்ள பல மதங்களும் மொழிகளும் இந்தியாவின் வளமான சொத்துக்கள் - தல்பிர்சிங்

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

நம்முடைய இதயம், குடும்பம், சமூகம் மற்றும் உலகத்தில் மகிழ்ச்சி இல்லாதபோது நாம் அடையும் பொருளாதார முன்னேற்றத்தால் நன்மை ஏதும் இல்லை என்றும், சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட உலகில் நன்றியுணர்வு, உரையாடல் மற்றும் ஒற்றுமை ஆகிய உணர்வுகளே நம்மை ஆள வேண்டும் என்றும் கூறியுள்ளார் பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ.

கடந்த வாரம் இந்தியாவின் புனேவில் உள்ள உலக அமைதி மண்டபத்தில்  சமயத்தலைவர்களும் உலகத்தலைவர்களும் பங்கேற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய போது இவ்வாறு கூறினார் மும்பையின் வசை பேராயரும் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலாளருமான பேராயர்  பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ.

அமைதியே நமது நிகழ்ச்சியின் முதன்மையான இடத்தில் இருக்கும் என மகிழ்வோடும் நம்பிக்கையோடும் தான் எதிர்பார்ப்பதாக எடுத்துரைத்த பேராயர் மச்சாடோ அவர்கள், அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இந்நிகழ்வின் வெற்றிக்காக கத்தோலிக்க மக்களை செபிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என உரைக்கும் நமது பண்டைய இந்திய ஞானமான வசுதைவ குடும்பகத்தை ஜி20 உச்சிமாநாடு நினைவுபடுத்துவதாக் எடுத்துரைத்த திரிச்சூர் பேராயர் அன்ரூஸ் அவர்கள், உலகளாவிய உண்மை, உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புகளை பகிர்தல் வழியாக வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக இம்மாநாடு திகழ்வதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வேற்றுமைகளுக்கு மத்தியிலும், பொதுவான சாவால்கள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் ஒரே மனித குடும்பதத்தால் நாம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனை இம்மாநாடு நினைவுபடுத்துகின்றது என்று கூறிய பேராயர் ஆண்ட்ரூஸ் அவர்கள், இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமிடையிலான நமது தொடர்பினை அடிக்கோடிட்டுக்காட்டுவதாகவும் இம்மாநாடு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

நூற்றுக்கும் அதிகமாக பேச்சாளர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சமய நல்லிணக்கத்தின் வழியாக உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை வடிவமைத்தல் என்னும் கருப்பொருளில் கலந்துரையாடினர்.

தொற்றுநோய், போர் மற்றும் மோதல்கள் விட்டுச்சென்ற விளைவுகள், காலநிலை மாற்றம், குழந்தைகளின் நிலை என இந்த உரையாடல் பரந்த அளவிலான தலைப்புகளை தொட்டது.

தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய காங்கிரஸின் தேசிய செயலாளரான தல்பிர்சிங் அவர்கள், இந்தியாவிலுள்ள பல மதங்களும் மொழிகளும் இந்தியாவின் வளமான சொத்துக்கள். இவை உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்க்க முடியும் என்றும், வேறுபாடுகள் பிரிவினைகளுக்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேற்றுமைகளை புரிந்துகொள்வது மற்றும் அவற்றை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2023, 14:38