சகாரோவ் விருதுப் பெயர்ப்பட்டியலில் ஆயர் Rolando José Álvarez Lag
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனித உரிமை மற்றும் விடுதலைக்காகப் போராடுபவர்களுக்கு வழங்கப்படும் 2023 சகாரோவ் விருதுப் பெயர்ப்பட்டியலில் Matagalpa மறைமாவட்டத்தின் ஆயரான Rolando José Álvarez Lagos அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான குழு, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வளர்ச்சிக் குழுக்களின் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட இந்த நியமங்கள், ஐரோப்பிய சட்டமன்றக் குழுவின் அரசியல் கூட்டணிகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2022 முதல் அரசுத்தலைவர் Daniel Ortega-வின் சர்வாதிகாரத்தால் நிகராகுவாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் Rolando José Álvarez Lagos அவர்கள், ஆட்சிக்கு எதிராக சதி மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தேச துரோகி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
ஆயர் ஆல்வாரெஸ் உடன் நிகராகுவாவில் மனித உரிமைக்காகப் போராடும் வில்மா நுனிஸ் டி எஸ்கார்சியா, தொழிலதிபர் எலோன் மஸ்க், ஆப்கானிய கல்வி ஆர்வலர்கள் மர்சியா அமிரி, பரஸ்டோ ஹக்கீம், மதியுல்லா வெசா, ஜார்ஜியா குடியரசின் நினோ லோம்ஜாரியா என்பவர்களின் பெயரும் இவ்விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1988 முதல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் போராடும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு சகாரோவ் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த மதிப்புமிக்க விருது 50,000 யூரோக்கள் பரிசை உள்ளடக்கியது.
இயற்பியலாளர் ஆண்ட்ரி சகாரோவ்
இயற்பியலாளர் ஆண்ட்ரி சகாரோவ் சோவியத் யூனியனின் எதிர்ப்பாளர் 1970 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் மற்றும் அரசியல் முயற்சிகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை நிறுவினார். 1980 இல் அவர் கைது செய்யப்பட்டு உள் நாடுகடத்தப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அக்டோபர் 12 அன்று, மூன்று இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்க வெளியுறவு மற்றும் மேம்பாட்டுக் குழுக்கள் கூட்டுக் கூட்டத்தை நடத்த உள்ளது. அக்டோபர் 19ல், பாராளுமன்றத் தலைவர் மற்றும் அரசியல் கூட்டணி தலைவர்கள் வெற்றியாளரை தேர்வு செய்வார்கள். விருது வழங்கும் விழா பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் டிசம்பர் 13அன்று நடைபெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்